Skip to main content

நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்...

Published on 28/08/2020 | Edited on 28/08/2020

 

congress workers gathered against neet and jee exams

 

நாடு முழுவதிலும் பல்வேறு பகுதிகளில், நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் காலவரையரையின்றி மூடப்பட்டுள்ள நிலையில் கடந்த மே மாதமே நடைபெற இருந்த நீட் தேர்வு, ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் செப்டம்பர் 13 அன்று தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதேபோல ஜே.இ.இ மெயின் தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் 6 ஆம் தேதி வரையிலும், ஜே.இ.இ அட்வான்ஸ் தேர்வு செப்டம்பர் 27 ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கல்வி நிலையங்களின் தொடர் முடக்கம், தேர்வு மையத்தின் பாதுகாப்பு குறித்த அம்சங்கள், தேர்வு நேரத்திலான போக்குவரத்து வசதிகள் உள்ளிட்டவை குறித்துப் பல தரப்பினரும் கவலை தெரிவித்து வந்தனர்.

 

இதனிடையே, உச்சநீதிமன்றத்தில் கரோனா தீவிரமாக இருக்கும் நிலையில் நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் அல்லது ரத்து செய்யவேண்டும் என மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஆனால், இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து நீட், ஜே.இ.இ. தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என மத்திய அரசு தொடர்ந்து தெரிவித்து வருகிறது. இந்நிலையில், மத்திய அரசின் இந்த முடிவைக் கடுமையாக எதிர்த்து வரும் காங்கிரஸ் கட்சி, எதிர்ப்பைப் பதிவு செய்யும் விதமாக நாடு முழுவதும் இன்று போராட்டங்கள் நடைபெறும் என அறிவித்திருந்தது. அதன்படி, காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இளைஞரணி மற்றும் மாணவர் அணி உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் கலந்துகொண்டு நீட் தேர்வுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பினர். 

 

 

சார்ந்த செய்திகள்