கனமழை காரணமாக வெள்ளக்காடாக காட்சியளிக்கும் பெங்களூரில் இளம்பெண் ஒருவர் தெரியாமல் மின்சாரம் பாயும் கம்பத்தை தொட்டதில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர் கனமழை மற்றும் நீர் வரத்து காரணமாக பெங்களூரில் பல இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் பெங்களூர் சித்தாபுரா பகுதியில் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்த அகிலா என்ற இளம்பெண் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த நிலையில் சாலையில் ஓடிய மழைநீரில் தடுமாறி இருசக்கர வாகனத்துடன் கீழே விழுந்துள்ளார்.
அப்பொழுது எழுந்திருப்பதற்காக அருகிலிருந்த மின்கம்பத்தை பிடித்துள்ளார் அகிலா. ஆனால் அந்த மின்கம்பத்தில் ஏற்கனவே மின்கசிவு இருந்த நிலையில் தூக்கிவீசப்பட்ட அகிலா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். அகிலாவின் உயிரிழப்பிற்கு பெங்களூரு மாநகராட்சி மற்றும் மின்சார வாரியத்தின் அலட்சியமே காரணம் என அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இளம்பெண் ஒருவர் மின்கம்பத்தால் உயிரிழந்த சம்பவம் அங்கு சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.