
திருட்டு வழக்கு ஒன்றில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட வைத்தியர் காவல் நிலையத்திலேயே மர்ம மரணம் அடைய, உறவினர்கள் செய்த சாலை மறியலால் பதற்றம் தொற்றியுள்ளது ராமநாதபுரம் மாவட்டத்தில்.!

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வடக்கூர் தெருவினை சேர்ந்தவர் மணிகண்டன். பரம்பரையாக வயிற்றில் "தொக்கம்" எடுக்கும் வைத்தியத் தொழிலை செய்து வந்த இவரை, இதே பகுதியிலுள்ள மகாதேவன் என்பவர் வீட்டில் 16 பவுன் தங்க நகை மற்றும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் திருடியதாக சந்தேகிக்கபட்டு முதுகுளத்தூர் க்ரைம் போலீசார் நேற்றிரவு முதுகுளத்தூர் போலீசார் அழைத்து சென்றிருக்கின்றனர். சாதாரண காவல் விசாரணைக்கு அழைத்து சென்றவர் இன்று காலையில் இறந்துள்ளார். இறந்த மணிகண்டனை முதுகுளத்தூர் காவல்நிலையத்திலிருந்து பரமக்குடிக்கு அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றிருக்கின்றனர். இறப்பின் காரணத்தை போலீசார் கூற மறுத்த நிலையில், " போலீசார் அடித்ததாலே மணிகண்டன் இறந்துள்ளார். சட்டப்படி போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென" முதுகுளத்தூர் டி.எஸ்.பி.அலுவலகம் எதிரிலுள்ள சாலையில் உட்கார்ந்து மறியல் செய்ய ஆரம்பித்தனர் இறந்தவரின் உறவினர்கள். சிறிது நேரம் மறியல் நீடித்த நிலையில் மாவட்ட ஏ.டி.எஸ்.பி. வெள்ளத்துரை தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுப்பட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த கலைந்து சென்றுள்ளனர். இதனால் இங்கு பதற்றம் நிலவி வருகின்றது.