மோடி சமுதாயத்தை இழிவுபடுத்திவிட்டதாக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். அதே நேரம் பாஜக தரப்பினர் இதற்கும் மத்திய அரசிற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என தெரிவித்து வருகின்றனர்.
நேற்று டெல்லி போலீசார் அறிவித்த தடையை மீறி டெல்லியில் காந்தியின் நினைவிடம் உள்ள ராஜ்காட் பகுதியில் 'சங்கல்ப் சத்தியாகிரக' என்ற பெயரில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, மூத்த தலைவர்கள், தொண்டர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இந்நிலையில் ராகுல் காந்தி தகுதி நீக்கத்தை கண்டித்து நாடாளுமன்றத்திற்கு வந்திருந்த திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் எம்.பிக்கள் கருப்பு சட்டை அணிந்து வந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதேபோல் தமிழக சட்டப்பேரவைக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கருப்பு சட்டையுடன் வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.