பாபா ராம்தேவ் பெண்களைப் பற்றிக் கூறிய கருத்துக்கு நாடெங்கும் கண்டனங்கள் வலுத்து வருகிறது. மேலும் பாபா ராம்தேவின் இக்கருத்திற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால் கூறியுள்ளார்.
நேற்று முன் தினம் புனேவில் நடந்த நிகழ்வில் பாபா ராம்தேவ், துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா பட்னாவிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய ராம்தேவ், “பெண்கள் புடவையிலும், சல்வாரிலும் அழகாக இருப்பார்கள். ஆடைகள் எதுவும் அணியாவிட்டாலும் அழகாக இருப்பார்கள்” எனக் கூறினார்.
இதற்கு டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் ‘பெண்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்த பாபா ராம்தேவ் அதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.
மராட்டிய மகளிர் ஆணையர் ரூபாலி சகாங்கர் அனுப்பிய நோட்டீசில் ‘பெண்களின் கவுரவத்தையும் கண்ணியத்தையும் கெடுக்கும் வகையிலான உங்கள் பேச்சிற்கு எதிராக ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாபா ராம்தேவ் தனது கருத்து குறித்த விளக்கத்தை மூன்று நாட்களுக்குள் கமிஷன் அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு ஆணையம் அறிவுறுத்துகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் மேடையிலிருந்த துணை முதல்வரின் மனைவி மற்றும் அங்கிருந்த பெண்கள் அனைவரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும் என்றும் இணையத்தில் கருத்துகள் பகிரப்பட்டு வருகிறது.