இந்தியா சுதந்திரம் அடைந்த போது, ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியை ஆட்சி செய்த மன்னர் ஹரிசிங், ஜம்மு காஷ்மீர் சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைக்க சில நிபந்தனைகளை விதித்தார். அங்கு வாழும் மக்களின் நலனுக்காக என சில நிபந்தனைகளுடன், ஜம்மு காஷ்மீர் சமஸ்தானத்தை இந்தியாவுடன் 1949-இல் இணைக்க சம்மதித்தார். மன்னர் ஹரிசிங்சின் நிபந்தனைகளை நிறைவேற்ற, அப்போதைய இந்திய அரசு, இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொண்டது. அதன்படி கொண்டுவரப்பட்டதே சட்டப் பிரிவு 370. இந்த சட்டப்பிரிவு மூலம் ஜம்மு காஷ்மீர் பகுதிக்கும் மக்களுக்கும் பல சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டன.
ஜம்மு, காஷ்மீர் மாநிலத்திற்கு இந்த சட்டதிருத்தத்தின் மூலம் கிடைத்த பலன்கள்...
இராணுவம், வெளியுறவு, தகவல் தொடர்பு துறைகள் தவிர, பிற துறைகள் தொடர்பாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் இயற்றும் சட்டங்கள், ஜம்மு காஷ்மீர் மாநில அரசு ஒப்புக்கொண்டால் மட்டுமே அங்கு அமல்படுத்த முடியும். அப்படி மாநில அரசு குறிப்பிட்ட சட்டத்தை ஒப்புக்கொள்ளவில்லை என்றால் அந்த சட்டங்கள் இம்மாநிலத்திற்கு பொருந்தாது.
ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் பிற மாநிலத்தவர்கள் அசையாச் சொத்துக்கள் வாங்க முடியாது. ஆனால் இம்மாநில மக்கள் இந்தியாவின் பிற மாநிலங்களில் அசையாச் சொத்துக்கள் வாங்கலாம்.
இம்மாநில பெண்கள் வெளிமாநில ஆண்களை திருமணம் செய்து கொண்டால், அப்பெண்கள் இம்மாநிலத்தில் அசையாச் சொத்துகள் வாங்க முடியாது. ஆனால் ஆண்கள் வெளிமாநில பெண்களை திருமணம் செய்து கொண்டாலும், அவர்கள் இம்மாநிலத்தில் அசையாச் சொத்துக்களை வாங்கலாம்.
இந்திய அரசியல் சாசனத்தின் 238 வது பிரிவு இம்மாநிலத்திற்கு பொருந்தாது.
இம்மாநிலத்தின் எல்லைகளை குறைக்கவோ அல்லது கூட்டவோ முடியாது.
35ஏ சட்டப்பிரிவு:
அதேபோல இம்மாநிலத்தின் நிரந்தர குடிமக்கள் யார் என்பதை தீர்மானிக்கும் சட்டமாக இந்த 35ஏ கொண்டுவரப்பட்டது. சட்டபிரிவு 370 ல் ஒரு பிரிவாக 1954 ல் இது இணைக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வாழ்பவர்களில் நிரந்தர குடியிருப்பாளர்கள யார் என்பதை வரையறுக்கவும், நிரந்தர குடியிருப்பாளர்களுக்கு அரசுத் துறைகளில் வேலைவாய்ப்பு, அரசு உதவித் தொகைகள் வழங்குதல் மற்றும் அசையாச் சொத்துகள் வாங்கவோ விற்கவோ உரிமை வழங்குதல் ஆகியவற்றை குறித்து தீர்மானம் செய்ய, இந்திய அரசிலமைப்பு சட்டப் பிரிவு 35ஏ உருவாக்கப்பட்டது.