Skip to main content

"நாக்கை அறுப்போம்" - பாஜகவிற்கு எதிராகக் கொதித்த தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்!

Published on 08/11/2021 | Edited on 08/11/2021


 

chandrasekar rao

 

தெலங்கானா அரசு வரும் ராபி பருவத்தில், நெல் பயிரிட வேண்டாம் என அம்மாநில விவசாயிகளை அண்மையில் கேட்டுக்கொண்டது. ஆனால், தெலங்கானா பாஜக தலைவர் பண்டி சஞ்சய், நெல்லை பயிரிடுமாறு விவசாயிகளைக் கேட்டுக்கொண்டதுடன், தெலங்கானா அரசு நெல் கொள்முதல் செய்வதை பாஜக உறுதி செய்யும் என்றும் தெரிவித்தார். அதேபோல் பெட்ரோல்-டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை ரத்து செய்யுமாறு பாஜக போராட்டம் நடத்தும் எனவும் பண்டி சஞ்சய் அறிவித்திருந்தார்.

 

இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், பாஜக அரசைக் கடுமையாக விமர்சித்ததுடன், பாஜக தலைவர்களின் நாக்கை அறுப்போம் எனவும் எச்சரித்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. செய்தியாளர்கள் சந்திப்பில் சந்திரசேகர் ராவ் பேசியதாவது; தெலங்கானா விவசாயிகளை நெல் பயிரிடச் சொல்லி பண்டி சஞ்சய் ஏமாற்றி வருகிறார்.  விளைபொருட்கள் கொள்முதல் செய்யப்படுவதை பாஜக உறுதி செய்யும் என்ற தவறான நம்பிக்கையை விவசாயிகளுக்கு அவர் அளித்து வருகிறார். நெல் வாங்கப்போவதில்லை என மத்திய அரசு கூறியுள்ளது. எனவேதான் விவசாயிகளின் நஷ்டம் அடைவதைத் தடுக்க, வேறு பயிர்களைப் பயிரிடுமாறு வேளாண்துறை அமைச்சர் விவசாயிகளைக் கேட்டுக்கொண்டார். மத்திய அரசு பொறுப்பற்ற முறையில் செயல்படுகிறது.

 

நான் சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சரை நேரடியாகச் சந்தித்து, கொள்முதல் செய்யப்பட்ட புழுங்கல் அரிசியை வாங்கிக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டேன். அவர், இதுதொடர்பாக முடிவு எடுத்த பிறகு என்னை தொடர்புகொள்வதாகக் கூறினார், ஆனால் இதுவரை எனக்கு எந்த பதிலும் வரவில்லை. தெலங்கானா மாநிலத்தில் ஏற்கனவே கடந்தாண்டு கொள்முதல் செய்யப்பட்ட 5 லட்சம் டன் நெல் உள்ளது. மத்திய அரசு அதை வாங்கிக்கொள்ளவில்லை. நெல் கொள்முதல் செய்ய மாட்டோம் என மத்திய அரசும், கொள்முதல் செய்வோம் என மாநில பா.ஜ.க.வும் கூறி வருகின்றன. உளறலைத் தவிருங்கள். எங்களைப் பற்றி தேவையற்ற கருத்துகளைத் தெரிவித்தால் உங்கள் (மாநில பாஜக தலைவர்கள்) நாக்கை அறுப்போம். நாய்களைக் குரைக்க விடுவது நல்லது என்று நினைத்து இதுவரை அமைதியாக இருந்தோம். ஆனால் இனி அமைதி காக்க மாட்டோம். சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

 

அருணாச்சல பிரதேசத்தில் சீனா நம் மீது தாக்குதல் நடத்தி வருகிறது ஆனால் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீங்கள் (பாஜக) விவசாயிகள் மீது கார்களை ஏற்றி கொலை செய்கிறீர்கள். விவசாயிகளை அடித்துக் கொல்லுமாறு பாஜக முதல்வர் சொல்கிறார். மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்போம். விவசாயிகளைக் காப்பாற்றும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது. எதிர்க்கட்சிகள் மலிவான அரசியல் செய்கின்றனர். அவர்கள் விவசாயிகளின் உணர்வுகளுடன் விளையாடுகிறார்கள். விவசாயிகளின் உரிமைகளுக்காக மத்திய அரசை எதிர்த்து தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) போராட்டம் நடத்தும்.

 

கடந்த ஏழு ஆண்டுகளில் பாஜக என்ன செய்துள்ளது? “இந்தியாவின் (தனி நபர்) ஜிடிபி வங்காளதேசம், பாகிஸ்தானை விடக் குறைவாக உள்ளது. மத்திய அரசு தேவையில்லாமல் வரிகளை உயர்த்தியுள்ளது. நீங்கள் வாக்குறுதி அளித்தபடி நாட்டிலுள்ள  ஒவ்வொருவருக்கும் ரூ.15 லட்சம் கொடுத்தீர்களா அல்லது இரண்டு கோடி வேலைகளைக் கொடுத்தீர்களா? பெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசு பொய் சொல்கிறது. 2014ல் 105 அமெரிக்க டாலராக இருந்த கச்சா எண்ணெய் விலை தற்போது 83 அமெரிக்க டாலராக உள்ளது. வெளிநாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளதாக பாஜக பொதுமக்களிடம் பொய் கூறியுள்ளது.

 

நாங்கள் பெட்ரோல் -டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை உயர்த்தவில்லை. ஒரு பைசா கூட உயர்த்தவில்லை. அதனால் அதனைக் குறைப்பது குறித்து எந்த கேள்வியும் இல்லை. டிஆர்எஸ் ஆட்சி அமைந்ததிலிருந்து வாட் வரி உயர்த்தப்படவில்லை. எந்த முட்டாள் நம்மிடம் மதிப்புக் கூட்டு வரியைக் குறைக்கச் சொல்வான்? அதை அதிகப்படுத்திய முட்டாள்தான் அதைக் குறைக்க வேண்டும். பெட்ரோல் மற்றும் டீசல் மீது விதிக்கப்பட்டுள்ள மொத்த செஸ் வரியை நீக்க வேண்டும் என்று இந்திய அரசிடம் கேட்டுக்கொள்கிறேன். இது சாத்தியமானது. மேலும் இது நாட்டின் நலனுக்கானது. ஏனெனில், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயராத நிலையில், பெட்ரோல், டீசல் மீது தேவையில்லாமல் மத்திய அரசு செஸ் வரியை விதித்து, ஏழை மற்றும் நடுத்தர மக்களின் மீதான சுமையை ஏற்றி உள்ளது. இப்போது, நாட்டின் ஏழை மக்களுக்கு அரசு நேர்மையாக இருந்தால், மொத்த செஸ் வரியையும் திரும்பப் பெற வேண்டும்.

 

இவ்வாறு சந்திரசேகர ராவ் கூறியுள்ளார். 
 

 

சார்ந்த செய்திகள்