டெல்லியின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஜாப்ராபாத், மவுஜ்பூர், சந்த்பாக், குரேஜிகாஸ், பஜன்புரா பகுதிகளில் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக கடந்த 24-ந் தேதி கல்வீச்சு, தீவைப்பு போன்ற வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. வன்முறை சம்பவங்களில் இதுவரை 35 பேர் பலியாகி இருக்கிறார்கள். மேலும் சுமார் 200 பேர் காயம் அடைந்து உள்ளனர்.
இந்த வன்முறை சம்பவங்களில் போலீசார் மெத்தனமாக இருந்ததாகவும், வன்முறையாளர்களுடன் கைகோர்த்திருந்ததாகவும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் டெல்லியில் நடந்த வன்முறை சம்மந்தமான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் ஒவ்வொன்றாக வரத் தொடங்கியிருக்கின்றன. அதில் ஒரு வீடியோவில், பெட்ரோல் பங்க் உள்ள சாலையில் பொதுமக்கள் யாரும் தென்படவில்லை. அந்த சாலை வெறிச்சோடி கிடக்கிறது. போலீசார் மட்டுமே உள்ளனர். பெட்ரோல் பங்க் முன்பு உள்ள E.B. போஸ்ட் கம்பத்தில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவை, ஒரு போலீஸ்காரர் மற்றொரு போலீஸ்காரர் உதவியோடு ஒரு பூந்தொட்டியில் ஏறி உடைக்கும் காட்சி பதிவாகி உள்ளது. மேலும் அந்த கேமராவை உடைக்கும்போது, அந்த கேமராவை உடைத்தால் உண்மை தெரியாமல் போய்விடும் என்று ஒருவர் சொல்லுவார். இருப்பினும் அந்த கேமராவை போலீசார் சேதப்படுத்தியுள்ளனர்.
வன்முறையில் ஈடுபட்டவர்களை காப்பாற்ற போலீசாரே இதனை செய்கின்றனர் என்று குற்றச்சாட்டுக்களும், விமர்சனங்களும் சமூக வலைதளங்களில் பதிவிடப்படுகின்றன.