தலைநகர் டெல்லியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் தண்ணீர் தேங்கியது. மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாகப் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குவதால் சுரங்கப்பாதைகளில் வாகனங்கள் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளன.
இத்தகைய சூழலில் தான் டெல்லியில் உள்ள பழைய ராஜேந்தர் நகரில் உள்ள ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தின் தரைதளத்தில் மழைநீர் நிரம்பியதில் சிக்கி நேற்று (27.07.2024) போட்டித் தேர்வுக்குத் தயாராகும் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப்படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் டெல்லியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அப்பயிற்சி மையத்தின் உரிமையாளர், மற்றும் ஒருங்கினைப்பாளார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதே சமயம் இந்த கண்டித்து டெல்லி கரோல் பாக் மெட்ரோ ரயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். மேலும் அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாகக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெல்லியில் உள்ள கட்டிடத்தின் தரைதளத்தில் தண்ணீர் தேங்கியதால் போட்டி தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் உயிரிழந்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. சில நாட்களுக்கு முன், மழையின் போது மின்சாரம் தாக்கி மாணவர் ஒருவரும் உயிரிழந்தார். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாதுகாப்பற்ற கட்டுமானம், மோசமான நகரத் திட்டமிடல் மற்றும் நிறுவனங்களின் பொறுப்பற்ற தன்மை ஆகியவற்றை ஒவ்வொரு நிலையிலும் சாதாரண குடிமக்கள் தங்கள் உயிரை இழந்து வருகின்றனர். பாதுகாப்பான மற்றும் வசதியான வாழ்க்கை என்பது ஒவ்வொரு குடிமகனின் உரிமையும் அரசாங்கத்தின் பொறுப்பும் ஆகும்” எனத் தெரிவித்துள்ளார்.