Skip to main content

“மம்தா பானர்ஜி மறைமுகமாக பா.ஜ.க.வுக்கு உதவுகிறார்” - தெலங்கானா காங்கிரஸ் பொதுச்செயலாளர் 

Published on 24/01/2024 | Edited on 24/01/2024
Telangana Congress General Secretary says Mamata Banerjee is indirectly helping BJP

இந்த ஆண்டு நடைபெறவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் சார்பில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஜனதா தளம், திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 25க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கித் தங்களது ஆதரவைப் பெருக்கி வருகின்றனர்.

அந்த வகையில், பீகார் மாநிலம் பாட்னாவில் இந்தியா கூட்டணியின் முதல் கூட்டம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 23 ஆம் தேதி பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. இதையடுத்து, பெங்களூர், மும்பை என அடுத்தடுத்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இந்தியா கூட்டணியின் 4வது ஆலோசனைக் கூட்டம் கடந்த டிசம்பர் 19 ஆம் தேதி டெல்லியில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் கடந்த 13 ஆம் தேதி காணொளி வாயிலாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 'இந்தியா' கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் நிராகரித்திருந்தார். மேலும் இந்த கூட்டணியின் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

Telangana Congress General Secretary says Mamata Banerjee is indirectly helping BJP

இதற்கிடையே, நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என திரிணாமுல் காங்கிரஸ் இன்று (24-01-24) அறிவித்துள்ளது. இது குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், "திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவோம் என்று நான் முன்பிருந்தே கூறி வருகிறேன். மக்களவை தேர்தலில் மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை. இங்கு பா.ஜ.க.வை தனித்து நின்று தோற்கடிப்போம். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணியில் ஒரு அங்கமாக உள்ளது” என்று தெரிவித்திருந்தார்.  இதேபோல், பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடும் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அறிவித்திருந்தார். 

இதுபற்றி தெலங்கானா காங்கிரஸ் பொதுச்செயலாளர் தீபா தாஸ் முன்ஷி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “மம்தா பானர்ஜி மறைமுகமாக பா.ஜ.க.வுக்கு உதவுகிறார் என்று நினைக்கிறேன். பா.ஜ.க.வுடன் அவருக்கு மறைமுகமான புரிதல் உள்ளது என்பது எங்களுக்கு ஏற்கெனவே தெரியும். அவரது இந்த முடிவு அதை நிரூபித்துவிட்டது. இதுநாள் வரை இந்தியா கூட்டணியில் இருந்த அவர், இப்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளார். எனவே, அவர் பா.ஜ.க.வுடன் கைகோர்த்து இருக்கிறார் என்பதையும், மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க.வுக்கு மறைமுகமாக உதவுவார் என்பதையும் இது நிரூபித்துள்ளது” என்று கூறினார்.  

சார்ந்த செய்திகள்