மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம், இன்றுடன் 22 ஆவது நாளை எட்டியுள்ளது. மத்திய அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததால், விவசாயிகள் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு, மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்தும், குறைந்த பட்ச ஆதார விலைக்கு தனி சட்டம் கோரியும், விவசாய போராட்டங்கள் குறித்து விவாதிக்க கூட்டப்பட்ட பிரத்யேக சட்டசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மேலும், விவசாயிகளின் போராட்டத்திற்கு முழு ஆதரவு அளிப்பதாகவும் டெல்லி அரசு சட்டமன்றத்தில் அறிவித்துள்ளது.
இந்த சட்டசபை கூட்டத்தின் போது, ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திர கோயல் , வேளாண் சட்ட நகல்களை கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.