நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் புதுச்சேரியில் பாகூர் வாக்குச்சாவடியில் நுழைவு வாயிலில் தாமரை வடிவிலான அலங்காரம் செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்த நிலையில், தற்பொழுது அவை நீக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம் பாகூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி ஒன்றில் 11/23 என்ற எண் கொண்ட வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. அந்த வாக்குச்சாவடியின் நுழைவு வாயிலில் பேப்பரால் செய்யப்பட்ட தாமரைகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. உடனடியாக இதுகுறித்து திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். புகாரைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற அதிகாரிகள் நுழைவு வாயிலில் ஒட்டப்பட்டிருந்த தாமரை வடிவிலான பேப்பர் பூக்களை அகற்றினர்.