
கரோனா என்ற பெருந்தொற்றின் பயம் நீங்கியது. இனி அவரவர் வேலைகளில் கவனம் செலுத்துவோமென்று மத்திய, மாநில அரசுகளும் பொதுமக்களும் நிம்மதிப் பெருமூச்சு விட்ட நிலையில், "நான் இன்னும் ஒழியவில்லை... உங்களை அச்சுறுத்த மீண்டும் வருகிறேன்" என்பதுபோல சீனாவில் கரோனா பரவல் நிலவரங்கள் பதற்றத்தை ஏற்படுத்துகின்றன.
சீனாவில் கடந்த மூன்றாண்டுகளாக கரோனா லாக்டௌன் இருந்த நிலையில், சீன மக்கள் பெருந்துன்பத்தை எதிர்கொண்டார்கள். சீன அரசாங்கம் மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை தங்கள் மக்கள் மீது விதித்து வந்ததால் அதற்கெதிராக மக்கள் போராட்டங்கள் வலுப்பெற்றன. இதையடுத்து, கடந்த மாதம் அங்கே லாக்டௌன் விலக்கப்பட்டது. ஆனால் லாக்டௌன் விலக்கப்பட்டதிலிருந்தே அங்கிருந்து வரும் செய்திகள் பதற்றத்தை அதிகரிப்பதாகவே இருக்கின்றன. கொரோனா வைரஸின் பரவல் அதிகரிப்பதோடு, தற்போது உருமாற்றமடைந்துள்ள கரோனா வைரஸ் அதிக பலமுள்ளதாக இருக்குமென்று அஞ்சப்படுகிறது.
தற்போது இந்தியாவில் கரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை 3,408 ஆக உள்ளது. புதிதாக 131 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,46,76,330 ஆக உள்ளது. இந்நிலையில், சீனாவில் மட்டுமல்லாது ஜப்பான், தென் கொரியா, பிரேசில், அமெரிக்காவிலும் கரோனாவின் பாதிப்பு மெல்லமெல்ல அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து மாநில அரசுகளை விழிப்புணர்வுடன் இருக்கும்படி மத்திய அரசு எச்சரித்துள்ளது. கரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்தும்படி அறிவுறுத்தியுள்ளது. மத்திய சுகாதாரச் செயலர் ராஜேஷ் பூஷன், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளும், கோரோனா பாதிப்புக்கான பரிசோதனையை INSACOG ஆய்வகங்களுக்கு அனுப்பி உறுதிப்படுத்த வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளார். இப்படி ஆய்வு நடத்தினால்தான் உருமாறிய கரோனா வைரஸின் வீரியம் குறித்த விவரங்களைத் தெரிந்துகொள்ள முடிவதோடு, அதற்கேற்ப பொது சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்று தெரிவித்தார்.
கரோனா பரவல் குறித்து ஆலோசிப்பதற்காக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா டெல்லியில் பல்வேறு துறை வல்லுநர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். ஆலோசனைகளுக்குப்பின், “கரோனா வைரஸ் பரவல் சீனா, பிரேசில், அமெரிக்கா போன்ற சில நாடுகளில் அதிகரித்துள்ளது. அதுகுறித்து இன்று வல்லுநர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்தினோம். கரோனா பரவல் முற்றிலுமாக ஓய்ந்துவிடவில்லை. எந்த ஒரு சூழ்நிலையையும் நாம் எதிர்கொள்ளும்படி நாம் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்” என்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
இதுகுறித்து மருத்துவ நிபுணர்களிடம் கேட்டபோது, “முதன்முறையாக கரோனா பரவல் அதிகரித்ததற்கு, குறித்த நேரத்தில் சர்வதேச விமானப் போக்குவரத்தை நிறுத்தி வைக்காததே முக்கிய காரணமாக இருந்தது. தற்போது சீனாவில் கரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், அந்நாட்டோடு விமானப் போக்குவரத்தை நிறுத்துவது குறித்து விரைந்து முடிவெடுக்க வேண்டும்” என்று கூறினார்கள். கரோனா விழிப்புணர்வு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தாவிட்டால் மீண்டும் ஒரு பெரிய லாக்டௌனை சந்திக்க வேண்டியிருக்கும் என்று அச்சம் தெரிவிக்கிறார்கள்.
- தெ.சு.கவுதமன்