தமிழகம், புதுச்சேரி, மகாராஷ்டிரா, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, டெல்லி, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், சத்தீஷ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அந்தந்த மாநில, யூனியன் பிரதேச அரசுகள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளையும், கரோனா தடுப்பூசிப் போடும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன. குறிப்பாக, பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கும், பல்வேறு கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன. மேலும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும், மத்திய உள்துறை அமைச்சகமும் அவ்வப்போது, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது.
இந்த நிலையில் டெல்லியில் இன்று (11/04/2021) செய்தியாளர்களைச் சந்தித்த டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், "டெல்லியில் தற்போது பரவும் கரோனா ‘நான்காம் அலை’ மிகவும் ஆபத்தானது. டெல்லியில் மீண்டும் முழு முடக்கத்தை அமல்படுத்த விரும்பவில்லை. கரோனாவை கட்டுப்படுத்த முழு முடக்கம் தீர்வாக அமையாது என நம்புகிறேன். சுகாதார உட்கட்டமைப்பில் பற்றாக்குறை ஏற்பட்டால் மட்டுமே ஊரடங்கை அமல்படுத்தும் சூழல் வரும். கரோனா தடுப்பூசி செலுத்த வயது வரம்பை நிர்ணயிக்கக் கூடாது. டெல்லியில் வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. டெல்லியில் 35 வயதுக்கு கீழ் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விகிதம் 65 ஆக உள்ளது" என்றார்.