கரோனா வைரஸ் உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 125 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பாதிப்பால் இது வரை 5,000 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர். இதேபோல் உலகளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,37,000 பேருக்கு மேல் உள்ளது. இந்தியாவிலும் கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. அனைத்து நாடுகளும் கரோனா வைரஸை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகின்றன.
இந்நிலையில் கரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாக ஒடிசாவில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஒடிசாவுக்கு வரும் வெளிநாட்டினர் தங்கள் பெயர்களை பதிவு செய்ய வேண்டும் என அம்மாநில அரசு உத்திரவிட்டுள்ளது. பெயர்களை பதிவு செய்ய தவறுவோர் குற்றவாளிகளாக கருதப்படுவர் என்றும் பதிவு செய்யும் வெளிநாட்டினருக்கு ஊக்கத்தொகையாக ரூ.15,000 வழங்கப்படும் என்றும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் ஒடிசாவுக்கு வரும் வெளிநாட்டினர் 14 நாட்கள் தனிமையில் கண்காணிக்கப்படுவார்கள் என்றும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.