இந்தியா மற்றும் சீன ராணுவத்தினர் இடையே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த ஆண்டு மோதல் வெடித்தது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணமடைந்தார்கள். இந்த மோதலில் 40க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில், நால்வர் மட்டுமே உயிரிழந்ததாகச் சீனா கூறியுள்ளது. இந்த மோதலைத் தொடர்ந்து இந்தியா - சீனா இடையே பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருகின்றன. இந்தப் பேச்சுவார்த்தைகளில் படை விலக்கல் தொடர்பாகவும், படை குறைப்பு தொடர்பாகவும் இரு நாடுகளிடையே சில தீர்மானங்கள் எட்டப்பட்டு, அவை படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வந்தன.
இந்தச்சூழலில் இந்தியா - சீனா இடையிலான 13வது கட்ட பேச்சுவார்த்தை அக்டோபர் 10 ஆம் தேதி நடைபெற்றது. இதில் எல்லை பிரச்சனையைத் தீர்ப்பதற்கு இந்தியா செய்த ஆக்கப்பூர்வமான பரிந்துரையைச் சீனா ஏற்கவில்லை. இதனால் இந்த பேச்சுவார்த்தை எந்த விதமான தீர்மானமும் எட்டப்படாமல் நிறைவடைந்தது.
இந்தநிலையில் இன்று இந்தியா-சீனா எல்லை விவகாரங்கள் தொடர்பான ஒர்க்கிங் மெக்கானிசம் ஃபார் கன்ஸ்சல்டேஷன் அண்ட் கோ-ஆர்டினேஷன் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் விரைவில் இரண்டு நாடுகளுக்குமிடையேயான 14 வது சுற்று பேச்சுவார்த்தையை விரைவில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த கூட்டம் தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது;இந்தியா-சீனா எல்லையின் மேற்கு பகுதியில் உள்ள மெய்யான கட்டுப்பாட்டு கோட்டில் நிலவும் நிலைமை குறித்து இரு தரப்பினரும் (இந்தியா-சீனா) நேர்மையான மற்றும் ஆழமான விவாதங்களை நடத்தினர். மேலும் அக்டோபர் 10 2021 அன்று நடைபெற்ற இரு தரப்பு மூத்த தளபதிகளின் கடைசி சந்திப்பிற்கு பிறகான முன்னேற்றங்களையும் ஆய்வு செய்தனர்.
இது சம்பந்தமாக இரு தரப்பினரும், அமைதியை மீட்டெடுக்க, கிழக்கு லடாக்கின் மெய்யான கட்டுப்பாட்டு கோட்டில் எஞ்சியுள்ள பிரச்சினைகளை இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் நெறிமுறைகளை முழுமையாகக் கடைப்பிடித்து தீர்க்கவேண்டியதன் அவசியத்தை ஒப்புக்கொண்டனர்.
இடைக்காலத்தில் நிலையான சூழலை உறுதிசெய்து, அசம்பாவித சம்பவங்களைத் தவிர்க்க வேண்டும் என இருதரப்பும் ஒப்புக்கொண்டன. ஏற்கனவே உள்ள இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் நெறிமுறைகளுக்கு இணங்கி, அனைத்து உராய்வு புள்ளிகளிலும் இருந்தும் படை விலகல் என்ற இலக்கை அடைவதற்காக இருதரப்பும் விரைவில் மூத்த தளபதிகள் இடையேயான 14வது சுற்றுப் பேச்சுவார்த்தையை நடத்தவேண்டும் என இருதரப்பும் ஒப்புக்கொண்டன.
இவ்வாறு வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.