கண்ணுக்கு தெரியாத கரோனா வைரஸ் மனித சமூகத்திற்கும், நவீன அறிவியலுக்கும் சவால் விட்டுக்கொண்டிருக்கிறது. இதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் வல்லரசு நாடான அமெரிக்கா உட்பட பொருளாதாரத்தில் முன்னேறிய அனைத்து நாடுகளும் திணறி வருகின்றன. உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23.50 லட்சத்தை கடந்துள்ளது. இந்த வைரஸ் பரவலை தடுப்பதற்கான ஒரே வழி சமூக விலகல் என்பதால் அனைத்து நாடுகளும் அதையே வலியுறுத்தி வருகின்றன.
இந்தியாவிலும் கரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மே 3 ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை உணர்ந்து, தற்போது கரோனா பாதிப்பு குறைவாக உள்ள இடங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஊரடங்கு எவ்வாறு அமல்படுத்தப்படுகிறது என தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. மேலும் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1553 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 36 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வருவோரின் விகிதம் 14.75% ஆக உள்ளது. கேரளா, ஒடிசாவில் கரோனா பாதிப்பு விகிதம் குறைந்துள்ளது. கடந்த 14 நாட்களில் 59 மாவட்டங்களில் கரோனா தொற்று ஏதுவும் பதிவாகவில்லை என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.