கர்நாடக மாநிலம் பெலகாவி மக்களவைத் தொகுதியில் இஸ்லாமிய வேட்பாளருக்கு இடமில்லை என கர்நாடக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெலகாவி மக்களவை உறுப்பினராக இருந்த மத்திய ரயில்வே துறை இணையமைச்சர் சுரேஷ் அங்காடி கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இதையடுத்து பெலகாவி மக்களவைத் தொகுதி காலியானதாக, தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. இதற்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ள சூழலில், பெலகாவி மக்களவைத் தொகுதியில் இஸ்லாமிய வேட்பாளருக்கு இடமில்லை எனக் கர்நாடக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய கே.எஸ்.ஈஸ்வரப்பா, "பெலகாவி தொகுதியில் இந்து மதத்தைச் சேர்ந்த எந்தச் சமூகத்தினருக்கும் வாய்ப்பளிப்போம். ஆனால், முஸ்லிம்களுக்கு இடமில்லை. இந்து மதத்தைச் சேர்ந்த லிங்காயத்துகள், குருபாக்கள் அல்லது பிராமணர்கள் சமூகத்தைச் சேர்ந்த யாரேனும் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார்களே தவிர முஸ்லிம் மதத்தினரை வேட்பாளராக முன்னிறுத்த மாட்டோம். மக்களின் நம்பிக்கையைப் பெற்ற ஒரு வேட்பாளரை நிறுத்தினால்தான் வெற்றி பெற முடியும். பெலகாவி இந்தத்துவாவின் மையமாக உள்ளது. எனவே, முஸ்லிம்களுக்கு ஒருபோதும் இடமில்லை" எனத் தெரிவித்துள்ளார். அவரின் பேச்சு தற்போது கர்நாடக அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.