![justin](http://image.nakkheeran.in/cdn/farfuture/AwSMGwf7hPn09mQGau_vo0dbolqE-VHY6eJ5J13IngE/1619672961/sites/default/files/inline-images/yogi-aditynath-cs.jpg)
இந்தியாவில் கரோனா பரவல் மோசமடைந்துள்ள நிலையில், இந்திய மருத்துவமனைகளில் ஆக்சிஜன், படுக்கைகள், மருந்துகள் ஆகியவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், இந்தியாவிற்கு உதவ பல்வேறு நாடுகள் முன்வந்துள்ளன. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆக்சிஜன் மற்றும் ஆக்சிஜன் உற்பத்தி சாதனங்களை அனுப்பி வருகின்றன. மேலும் உதவிகள் செய்வதாகவும் உறுதியளித்துள்ளன.
இந்நிலையில், தற்போது கனடா, நியூசிலாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகளும் இந்தியாவிற்கு உதவிக்கரம் நீட்டியுள்ளன. 10 மில்லியன் கனடா டாலர்களை, இந்திய செஞ்சிலுவை சங்கத்திற்கு அளிப்பதாக கனடா அறிவித்துள்ளது. இதுதொடர்பாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, "இந்திய மக்கள் மோசமான சூழ்நிலையை எதிர்கொண்டு வருகிறார்கள். அவசர ஊர்தி சேவையிலிருந்து, தனிநபர் பாதுகாப்பு கவசம் வாங்குவதுவரை அனைத்திற்கும் உதவும் வகையில், கனடா செஞ்சிலுவை சங்கம் மூலமாக இந்திய செஞ்சிலுவை சங்கத்திற்கு பத்து மில்லியன் டாலர்களை வழங்குகிறோம்" என தெரிவித்துள்ளார். 10 மில்லியன் கனடா டாலர்கள் என்பது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 50 கோடி ரூபாயாகும்.
அதேபோல், நியூசிலாந்து அந்தநாட்டு மதிப்பில் 1 மில்லியன் டாலர்களை இந்தியாவிற்கு வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்தியாவிற்கு உதவ சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திற்கு இத்தொகையை அளிப்பதாக நியூசிலாந்து தெரிவித்துள்ளது. மேலும் சிங்கப்பூர், 256 ஆக்சிஜன் சிலிண்டர்களை இந்தியாவிற்கு அனுப்பியுள்ளது. இந்தியாவிற்கு உதவும் முயற்சியில் மேலும் பல நாடுகள் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.