அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மக்களவை குழு தலைவருமான சோனியா காந்தி தலைமையில் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று (17/04/2021) காணொளி மூலம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலட், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், முன்னாள் மக்களவை சபாநாயகர் மீரா குமார், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்கள் பிரியங்கா காந்தி, அஜய் மக்கான் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ராஜீவ் சுக்லா, டாக்டர். செல்லகுமார், பவன் குமார் பன்சால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த செயற்குழு கூட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், கரோனா தடுப்பூசி போடும் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார் சோனியா காந்தி. அப்போது பேசிய அவர், "கரோனா சிகிச்சை மருந்துகள், உபகரணங்கள் ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும். ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவிர் மீது 12%, வெண்டிலேட்டர் போன்றவை மீது 20% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது" என்றார்.
அதன் தொடர்ச்சியாக, சோனியா காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், "கரோனா தடுப்பூசிக்கான வயது வரம்பை 45- லிருந்து 25 வயதாகக் குறைக்க வேண்டும். ஊரடங்கை மீண்டும் அமல்படுத்துவதால் ஏழைகள் மட்டுமின்றி, பொருளாதார நடவடிக்கையும் பாதிக்கும். ஊரடங்கால் பாதிக்கப்படும் தகுதியானோருக்கு மாதம் ரூபாய் 6,000 வழங்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.