நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. முதல் நாளான 18ஆம் தேதி பழைய நாடாளுமன்றத்திலும், அதை தொடர்ந்து அதற்கடுத்த நாட்களில் புதிய நாடாளுமன்றத்திலும் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 19ஆம் தேதி புதிய நாடாளுமன்றத்தில் கூட்டத்தொடர் நடைபெறுகிறது என்று கூறப்படுகிறது. அன்றைய தினம் சிறிய பூஜைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு மாறும் பொழுது அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு புதிய சீருடை வழங்கப்பட இருக்கிறது. இந்த சீருடையை பாட்னா தேசிய ஆடை அலங்கார தொழில்நுட்ப மையம் தயாரித்துள்ளது. நாடாளுமன்ற செயலகத்தில் 5 பிரிவுகளைச் சேர்ந்த ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். ஒவ்வொரு பிரிவினருக்கு ஒவ்வொரு விதமான சீருடை வழங்கப்பட இருக்கின்றன. அதில் ஆண் ஊழியர்களுக்கு, ‘நேரு ஜாக்கெட்’ பாணியில் இளஞ்சிவப்பு நிற சட்டையும், காக்கி நிற பேண்டும் சீருடையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் சட்டையில் தாமரை பூக்கள் அச்சாகி இருக்கும் .
அதே போல் நாடாளுமன்றத்தில் இரு அவைகளின் காவலர்களின் உடைகளும் மாற்றப்பட்டு இருக்கின்றன. அவர்கள் மணிப்பூர் தலைப்பாகை அணிந்திருப்பார்கள். அதே போல், பெண் ஊழியர்களுக்கும் சேலை சீருடையாக வழங்கப்பட இருக்கிறது. ஊழியர்களுக்கு வழங்கப்படும் சீருடையில் தாமரை பூக்கள் அச்சிடப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தாமரை நமது நாட்டின் தேசிய மலர் என்றாலும் கூட, அது பா.ஜ.க கட்சியின் சின்னம் என்று காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கூறுகையில், “ நாடாளுமன்றம் அனைத்து கட்சிகளுக்கும் அப்பாற்பட்டதாகும். ஆனால், அதை கட்சி சொத்தாக பா.ஜ.க மாற்றி வருகிறது. நாடாளுமன்றத்தில் பணிபுரியும் ஊழியர்களின் சீருடையில் தேசிய விலங்கு என்பதால் ‘புலி’ படத்தை ஏன் போடவில்லை?.அதே போல் தேசிய பறவை என்பதால் ‘மயில்’ படத்தை ஏன் போடவில்லை? ஏனென்றால் அவையெல்லாம் பா.ஜ.க.வின் சின்னம் அல்ல. இப்படி மலிவாக நடந்துகொள்ளும் பா.ஜ.க.வினரின் செயலை சபாநாயகர் கவனிக்க வேண்டும்” என்று கூறினார்.