தலையில் காயம் பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவருக்கு, காலில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த விஜேந்திர தியாகி என்பவர் விபத்தில் சிக்கி தலை மற்றும் முகத்தில் சிறு காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தலையில் அறுவைச் சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரை அளித்திருந்தனர். அதே அவசர சிகிச்சைப் பிரிவில் விரேந்திர சிங் என்பவருக்கு காலில் எலும்பு முறிவு காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், விஜேந்திர மற்றும் விரேந்திர தியாகி என்ற பெயர்க் குழப்பத்தில் மருத்துவர் விஜேந்திர தியாகிக்கு காலில் சிறுதுளை இட்டு அறுவைச் சிகிச்சை செய்துள்ளனர். சிகிச்சையின்போது மயக்கநிலையில் இருந்த விஜேந்திர தியாகி, கண்விழித்துப் பார்க்கையில் அதிர்ச்சி காத்திருந்தது. அவரால் சாதாரணமாக நடக்க முடியவில்லை. இதுகுறித்து அவரது மகன் மருத்துவமனை நிர்வாகத்தில் புகாரளித்த நிலையில், மீண்டும் அவருக்கு தலையில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.
இப்போது என் அப்பா பாதுகாப்பான நிலையில் இருந்தாலும், தேவையற்ற அறுவைச் சிகிச்சையால் தற்போது அவரால் நடக்கமுடியவில்லை என விஜேந்திர தியாகியின் மகன் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து முன்னறிவிப்பு மற்றும் முறையான அனுமதியின்றி எந்தவித அறுவைச் சிகிச்சையையும் மருத்துவர்கள் மேற்கொள்ளக் கூடாது என டெல்லி மருத்துவத்துறையின் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.