Skip to main content

''ஒன்னு டிவிகே... இன்னொன்னு டிஎம்கே...''-விஜய் பரபரப்பு பேச்சு 

Published on 28/03/2025 | Edited on 29/03/2025
 ''One is TVK... the other is DMK...''-Vijay's sensational speech

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று தற்போது சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. பொதுக்குழுவில் தலைவருக்கு அதிகாரம் அளித்தல்; மாநில அரசுகளுக்கான அதிகாரத்தை பகிர்ந்தளித்தல் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராகவும், பரந்தூர் விமான நிலைய திட்டத்தை எதிர்த்தும்; டாஸ்மாக் முறைகேடு; அரசு ஊழியர்கள் போராட்டம்; இருமொழிக் கொள்கை; சாதிவாரி கணக்கெடுப்பு; பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்தும்  என மொத்தம் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பேசுகையில், ''என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கும் தோழிகளுக்கும் வணக்கம். கதறல் சத்தம் எல்லாம் எப்படி இருக்கு. 'தமிழுக்கும் அமுதென்று பேர்; இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்' என்று தமிழ்நாடு இருக்கிற சூழ்நிலையில் நாம் வரலாறு  படைப்பதற்கு தயாராக வேண்டிய அவசியத்தை நீங்கள் எல்லோரும் புரிந்து வைத்திருப்பீர்கள் என நம்புகிறேன். அரசியல் என்றால் என்னங்க ஒவ்வொரு குடும்பமும் நன்றாக வாழ வேண்டும் என நினைப்பது அரசியலா? இல்லை ஒரே ஒரு குடும்பம் மட்டும் தமிழ்நாட்டை சுரண்டி நன்றாக வாழ வேண்டும் என நினைப்பது அரசியலா? நீங்கள் சொல்லுங்கள் எது அரசியல்? எல்லாருக்கும் நல்லது நடப்பது தானே அரசியல். அது தான் நம்ம அரசியல்.

காட்சிக்கு திராவிடம் ஆட்சிக்கு திராவிட மாடல் என்று தினம் தினம் மக்கள் பிரச்சனைகளை மடைமாற்றி, மக்கள் விரோத மன்னர் ஆட்சியை நடத்துகின்ற இவர்கள் நமக்கு எதிராக செய்கின்ற செயல் ஒண்ணா? ரெண்டா? மாநாட்டில் ஆரம்பித்தது அதன் பிறகு நான் கலந்து கொண்ட புத்தக வெளியீட்டு விழா; பரந்தூர் சென்றது; இரண்டாம் ஆண்டு துவக்க விழா; இன்றைய பொதுக்குழு வரைக்கும் எங்கெல்லாம் எப்படியெல்லாம் தடைகள். ஆனால் அத்தனை தடைகளையும் தாண்டி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள், தோழர் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கிறது. இனி நடந்து கொண்டுதான் இருக்கும்.

tvk

மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே... மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே... பேரை மட்டும் வீரப்பா சொன்னால் பத்தாது அவர்களே.. செயலிலும் ஆட்சியிலும் அதை காட்ட வேண்டும் அவர்களே... ஒன்றியத்தில் பாஜக ஆட்சி ஒரு பாசிச ஆட்சி என அழைக்கப்படுது. இங்கு நீங்கள் பண்ற ஆட்சி மட்டும் என்னவாம். அதுக்கு கொஞ்சம்கூட குறைவில்லாத அது பாசிச ஆட்சிதானே.

என் நாட்டு மக்களையும் தோழர்களையும் சந்திப்பதற்கு தடைபோட நீங்கள் யாருங்க. தடையை மீறி போக வேண்டுமென்றால் போய் பார்ப்பேன். ஆனால் சட்டத்தை மதிக்க வேண்டும் என்பதால் தான் அமைதியாக இருக்கிறேன். நேற்று வந்தவன் எல்லாம் முதலமைச்சராக கனவு காண்கிறான் என்று சொல்கிறீர்கள். அது நடக்கவே நடக்காது என்று சொல்கிறீர்கள். அப்புறம் ஏன் எந்த கட்சிக்கும் இல்லாத நெருக்கடியை தமிழக வெற்றிக் கழகத்திற்கு மட்டும் போடுறீங்க. அணை போட்டு ஆத்த வேண்டுமானால் தடுக்கலாம் காத்த தடுக்க முடியாது. அதையும் தாண்டி தடுக்க வேண்டும் என்று நினைத்தால் சாதாரணமாக இருக்கிற காத்து சூறாவளியாக மாறும். ஏன் சக்தி மிக்க புயலாகக் கூட மாறும்.

தினம் தினம் கொடுமைகளை அனுபவிக்கும் பெண்கள் தான் உங்களுடைய அரசியலுக்கு முடிவு கட்டப் போகிறார்கள். இங்கு நீங்கள் தான் இப்படின்னா அங்க அவங்க.. யாரு உங்கள் சீக்ரெட் ஓனர் அவர்கள் உங்களுக்கும் மேல.. மாண்புமிகு திரு மோடி ஜி தமிழ்நாடு என்றால் ஏன் உங்களுக்கு அலர்ஜி. உங்களுடைய பெயர்களை எல்லாம் சொல்வதற்கு பயமா எனக்கு. மத்தியில் ஆள்பவர்கள் என சொல்லுகிறோம் மத்தியில் ஆள்வது யார் காங்கிரசா? தமிழ்நாட்டில் ஆள்பவர்கள் என சொல்கிறோம் தமிழ்நாட்டில் ஆள்வது  யார்? அதிமுகவா? பாத்துக்கிட்டே இருங்க அடுத்த வருடம் தமிழ்நாடு இதுவரை சந்திக்காத ஒரு வித்தியாசமான ஒரு தேர்தலை சந்திக்கும். இதில் இரண்டே இரண்டு பேருக்கு நடுவில் தான் போட்டியே. ஒன்னு டிவிகே இன்னொன்னு டிஎம்கே'' என்றார்.

சார்ந்த செய்திகள்