
பா.ஜ.க துர்நாற்றத்தை விரும்புவதால் தான் அவர்கள் பசுத் தொழுவங்களை கட்டுகிறார்கள் என்று அகிலேஷ் யாதவ் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்தாண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், கன்னோஜ் தொகுதியில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் போட்டியிட்டு வெற்றி எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்படி, அவர் மக்களவை உறுப்பினராக பொறுப்பு வகித்து வருகிறார்.
இந்த நிலையில், தனது அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட வாசனை திரவிய பூங்கா திட்டம் குறித்து ஊடகங்களுக்கு அகிலேஷ் யாதவ் பேட்டி அளித்தார். அதில் அவர் பேசியதாவது, “கன்னோஜ் தொகுதி எப்போதும் சகோதரத்துவத்தின் நறுமனத்தைப் பரப்பியுள்ளது. கன்னோஜ் மக்கள், இந்த பா.ஜ.க துர்நாற்றத்தை முற்றிலுமாக அகற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அவர்கள் (பா.ஜ.க) துர்நாற்றத்தை விரும்புகிறார்கள், அதனால் தான் அவர்கள் பசுத் தொழுவங்களை கட்டுகிறார்கள். ஆனால், எங்களுக்கு வாசனை திரவியம் பிடிக்கும், அதனால் தான் நாங்கள் ஒரு வாசனை திரவிய பூங்காவைக் கட்டினோம். நாங்களை வாசனை திரவியத்தை விரும்புகிறோம், அவர்களுக்கு துர்நாற்றம் பிடிக்கும்” எனத் தெரிவித்தார்.
அகிலேஷ் யாதவ்வின் இந்த கருத்துக்கள், பா.ஜ.கவினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு மாநில துணை முதல்வர் மெளரியா கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “ஒரு விவசாயியின் மகன், மாட்டுச் சாணம் துர்நாற்றம் வீசுவதைக் கண்டால், அவன் வேர்களுடனும், சமூகத்துடனும் உள்ள தொடர்பை இழந்துவிட்டான் என்று அர்த்தம். அகிலேஷ் யாதவ் மாட்டுச் சாணம் துர்நாற்றம் வீசுவதைக் கண்டால், அவரது கட்சி நிச்சயமாக அழிவை நோக்கிச் செல்லும்” எனக் கூறினார்.
யோகி ஆதித்யநாத், உத்தரப் பிரதேச முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, சட்டவிரோத இறைச்சி கூடங்களை மூடிவிட்டு, பசுத் தொழுவங்களை பராமரிக்க நிதி ஒதுக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.