18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக 7 கட்டங்களாக நடைபெற்ற நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன. மாலை 5 மணி நிலவரப்படி மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 294 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் 231 இடங்களிலும், மற்றவை 17 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. இந்த நிலையில், நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிகப்படியான வாக்குகளை நோட்டா பெற்றுள்ளது.
மொத்தம் 29 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மத்திய பிரதேச மாநிலத்தில், ஏப்ரல் 19, ஏப்ரல் 26 மற்றும் மே 7, மே 13 என நான்கு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில், இந்தூர் உள்ளிட்ட 8 தொகுதிகளுக்கு மே 13ஆம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் அக்ஷய் கண்டி பாம், வேட்பாளர்கள் வேட்புமனுவை வாபஸ் பெற வேண்டிய கடைசி நாளில் வாபஸ் பெற்று பா.ஜ.க.வில் இணைந்தார். இதனால், இந்தூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் எந்த வேட்பாளரும் போட்டியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து, காங்கிரஸ் கட்சியும் வேட்பாளர் இல்லாமல் இந்தூர் தொகுதியில் தீவிர பிரச்சாரம் செய்து வந்தது. அதில், காங்கிரஸுக்கு வாக்களிக்க விரும்புபவர்கள் நோட்டாவுக்கு வாக்களிக்குமாறு, காங்கிரஸ் கட்சி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தது. அதன்படி, இந்தூர் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் முடிவுகளை இன்று எண்ணப்பட்டதில் நோட்டாவுக்கு 2.18 லட்சம் வாக்குகள் கிடைத்துள்ளது.
கடந்த 2013ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நோட்டாவுக்கு முதல் முறையாக அதிக வாக்குகள் பதிவாகி சாதனை படைத்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 69 சதவீதம் பதிவான இந்தூர் தொகுதியில் நோட்டாவுக்கு 5,045 வாக்குகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.