அனுமன் யாத்திரையின் போது, இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் வன்முறை வெடித்தது.
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, டெல்லியின் வடமேற்கு பகுதியில் உள்ள ஜகாங்கிர்புரியில் பக்தர்கள் யாத்திரை மேற்கொண்டனர். அப்போது அடையாளம் தெரியாத சிலர், பக்தர்கள் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, இது இரு பிரிவினரிடையே மோதலாக வெடித்தது. ஒருவருக்கொருவர் கற்களை வீசியும், ஆயுதங்களைக் கொண்டு தாக்கியும் மோதலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்த டெல்லி காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மோதலில் ஈடுபட்டவர்களைத் தடுக்க முயன்றனர். அப்போது, எதிர்ப்பாராத விதமாக காவலர்கள் எட்டு பேர் படுகாயமடைந்தனர். அதேபோல், மோதலில் ஈடுபட்ட பலரும் காயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவனைகளில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வருகின்றன.
தொடர்ந்து, ஜகாங்கிர்புரியில் நிலைமைக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. பதற்றமான சூழல் நிலவியதால், சிறப்புப்படைகளை அனுப்பினார் காவல்துறை அதிகாரி ராகேஷ் அஸ்தனா.
வன்முறை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், அனைவரும் அமைதிக்காக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
டெல்லி காவல்துறை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் வருவதால், காவல்துறையினர் மூத்த அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசி வாயிலாக பேசியதாக தகவல்கள் கூறுகின்றன.
இதனிடையே, வன்முறையைத் தொடர்ந்து டெல்லி மற்றும் உத்தரப்பிரதேசம் எல்லையிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
டெல்லியில் நேற்று (16/04/2022) அனுமன் ஜெயந்தி யாத்திரையின் போது, நடைபெற்ற வன்முறை தொடர்பாக, எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், வன்முறையின் போது துப்பாக்கி, வாள், தடிகள், கற்கள் போன்றவை பயன்படுத்தப்பட்டதாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.