சீனாவில் வூகான் மாகாணம் முழுவதும் வைரஸ் பிடியில் சிக்கி பெரும் அழிவை சந்தித்து வருகின்றது. கரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தோற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே பெரும் அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தன. இருந்த போதிலும் இதுவரை இந்தியாவிலும் 42 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை இந்திய அரசாங்கம் தற்போது உறுதி செய்துள்ளது. தமிழகத்திலும் சிலருக்கு அந்த பாதிப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வழிப்பாட்டு தளங்களிலும் மருத்துவ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், திருப்பதி தேவஸ்தானம் இன்று மிக முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. கரோனா தாக்குதல் அச்சம் இருப்பதால் ஏழுமலையானை தரிசிக்க வரும் பயணிகள் யாருக்கேனும் தொடர் காய்ச்சல், இரும்பல் இருந்தால் குணமாகும் வரையில் கோயிலுக்கு வர வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். திருப்பதி சிம்ஸ் மருத்துவமனையில் கரோனா ரத்தமாதிரி பரிசோதனை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது, மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பாதுகாப்பு முகமூடிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால் திருப்பதி செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
Published on 09/03/2020 | Edited on 09/03/2020