Skip to main content

“அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டவர் ஆளுநர்” - உச்சநீதிமன்றம்

Published on 28/02/2023 | Edited on 28/02/2023

 

“The Governor is bound by the decision of the Cabinet” – Supreme Court

 

பஞ்சாப் மாநிலத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரை கூட்டுவதில் மாநில அமைச்சரவை விடுத்த கோரிக்கையை ஏற்காமல் ஆளுநர் தாமதப்படுத்தினார் என்ற குற்றசாட்டு எழுந்தது. 

 

மார்ச் 3 ஆம் தேதி, பஞ்சாப் சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடரை கூட்டுவதற்கு மாநில அரசு முடிவு செய்து இது குறித்த ஆவணங்களையும் பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வரிலால் புரோஹித்திற்கு மாநில அரசு அனுப்பியிருந்தது. அதற்கான அனுமதி கிடைக்காத படியால் பஞ்சாப் மாநில அரசு, பட்ஜெட் கூட்டத்தொடரை கூட்டுவதற்கு ஆளுநர் காலதாமதம் செய்கிறார் எனக் கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மேலும் இது அவசரமான வழக்கு என்றும் இதை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தது. 

 

இந்நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சொலிசிட்டர் ஜெனரல் சுஷார் மேத்தா, ‘ஆளுநர் கூட்டத் தொடருக்கான ஒப்புதலை ஏற்கனவே அளித்துவிட்டார். பஞ்சாப் அரசின் குற்றச்சாட்டு இனி நீடிக்காது’ எனக் கூறினார். ஒப்புதல் கிடைத்ததன் காரணமாக இவ்வழக்கில் தீர்ப்புகள் வழங்க வேண்டிய அவசியம் இல்லாமல் ஆனது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. அதன்படி, மாநில அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர். ஆளுநர் கேட்கும் விபரங்களை முதல்வர் அளிக்க வேண்டும் எனக் கூறியுள்ளது.

 

கடந்த சில தினங்களுக்கு முன்பு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன் தொடர்பான விடுதலை குறித்த விசாரணையில் ஆளுநர் தாமதப்படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்தபோது அதை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆளுநர் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவெடுக்க வேண்டும். காலதாமதம் செய்யக்கூடாது எனக் கூறி இருந்தது. தற்போது அந்த உத்தரவை மீண்டும் உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்