திருப்பதி பெருமாள் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தலைமுடி நேற்று ஏலம் விடப்பட்டு அதன் மூலம் நேற்று தேவஸ்தானத்திற்கு ரூ. 7.94 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையானுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக் கடனாக தினமும் தங்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். தினமும் சுமார் 30 முதல் 40 ஆயிரம் பக்தர்கள் திருப்பதி கோவிலில் தலைமுடி காணிக்கை செலுத்தி வருகின்றனர். இந்த தலைமுடி தரம் வாரியாக பிரிக்கப்பட்டு அவை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை என ஆண்டுக்கு நான்கு முறை ஏலம் விடப்படும். அவை இ-டெண்டர் மூலம் ஏலம் விடப்படுகிறது. இதன்படி கடந்த மூன்று மாதங்களில் காணிக்கையாக்கப்பட்ட 4,300 கிலோ தலைமுடியானது நேற்று ஏலம் விடப்பட்டதில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ. 7.94 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.