மலையாள திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களில் பாலியல் குற்றங்களைத் தடுக்க, அது தொடர்பான புகார்களை விசாரிக்கக் குழு அமைக்க வேண்டுமென கேரள மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டபிள்யூசிசி (WCC) எனப்படும் திரையுலக பெண்களுக்கான கூட்டமைப்புத் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நடிகை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவத்தைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட டபிள்யூசிசி (WCC), கேரள திரையுலகில் பணியாற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில், தயாரிப்பு நிறுவனங்களில் சிறப்பு குழு அமைக்கக்கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில், பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்களைத் தடுக்கும் பொருட்டு உருவாக்கப்பட்ட சட்டத்தின் கீழ் திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் குழு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
குறைந்தபட்சம் 10 நபர்கள் கொண்டதாக இக்குழு இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விசாகா கமிட்டிக்கான வழிமுறைகளைப் பின்பற்றி இந்த குழுக்கள் அமைக்கப்படுவதை மலையாள திரைப்பட நடிகர் சங்கம் உறுதி செய்ய வேண்டும் என்றும் கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு மலையாள திரைப்பட நடிகர் சங்கமான அம்மா (AMMA) ஒப்புக் கொண்டுள்ளது.