அனைத்துக் கட்சி கூட்டத்தில், சீன ராணுவம் இந்தியப் பகுதிக்குள் நுழையவில்லை எனப் பிரதமர் மோடி பேசியது சர்ச்சையான நிலையில், இதுகுறித்து பிரதமர் அலுவலகம் சார்பில் விளக்கம் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.
லடாக் பகுதியில் இந்திய, சீன ராணுவ வீரர்களுக்கு இடையே கடந்த திங்கள்கிழமை இரவு நடைபெற்ற மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். இந்த மோதலால் இருநாட்டு உறவுகளில் புதிய சிக்கல்கள் உருவாகியுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக ஆலோசிக்க நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "இந்திய எல்லைக்குள் சீனப் படைகள் ஊடுருவவுமில்லை ராணுவ நிலைகளைக் கைப்பற்றவுமில்லை. இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றவர்களுக்குத் தக்க பாடம் கற்பிக்கப்பட்டது" எனத் தெரிவித்திருந்தார். பிரதமர் மோடியின் இந்தப் பேச்சைச் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சிகள், இது இந்திய ராணுவத்தினரை அவமதிக்கும் விதமாக உள்ளதாக விமர்சனங்களை முன்வைத்தன. இதனையடுத்து பிரதமரின் இந்தப் பேச்சு கடும் சர்ச்சையானது. இந்நிலையில் இதுகுறித்து பிரதமர் அலுவலகம் அளித்துள்ள விளக்கத்தில், "அனைத்துக் கட்சி கூட்டத்தில் சீன அத்துமீறல் பற்றி பிரதமர் மோடி கூறியதைத் தவறாகத் திசை திருப்புகிறார்கள். மோதலுக்குப் பின் சீனா அத்துமீறவில்லை என்றுதான் பிரதமர் மோடி பேசினார்" என அந்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.