Skip to main content

“இந்தக் கடினமான நேரத்திலும் உடன் இருக்க வேண்டும்” - மல்யுத்த வீரர்களுக்கு சானியா மிர்சா ஆதரவு

Published on 28/04/2023 | Edited on 28/04/2023

 

harbhajan singh and saniya mirza give them support to sakshi malik and vinesh bogat for indian wrestlers issue 

 

இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராக பாஜக எம்.பி. பிரிஜ்பூஷண் சரண் சிங் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், சரண் சிங் மற்றும் தேசிய பயிற்சி முகாமில் உள்ள பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் குற்றம் சாட்டியிருந்தார்.

 

இதையடுத்து இந்திய மல்யுத்த சம்மேளனத்தை கலைத்துவிட்டு புதிய நிர்வாகத்தை உருவாக்க வேண்டும். பாஜக எம்.பி பிரிஜ்பூஷண் சரண் சிங் பதவி விலக வேண்டும். அதோடு அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அதுவரை எங்களது போராட்டம் ஓயாது என்று கூறி பஜ்ரங் புனியா உள்ளிட்ட ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற வீரர்கள் கூட இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகத்திற்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஜனவரி மாதம் 3 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதன்பிறகு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

 

மேலும் மல்யுத்த வீரர்களின் கோரிக்கையை ஏற்று பிரிஜ்பூஷண் சரண் சிங் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டினை விசாரிக்க குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் 5 பேர் அடங்கிய குழு ஒன்றை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து  இந்த குழுவானது விசாரணை செய்து அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. இந்நிலையில் பிரிஜ்பூஷண் சரண் சிங் மீது எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 23 ஆம் தேதி முதல் மல்யுத்த வீரர்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

 

harbhajan singh and saniya mirza give them support to sakshi malik and vinesh bogat for indian wrestlers issue 

 

இந்நிலையில் இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டரில், "சாக்‌ஷி, வினேஷ் ஆகியோர் இந்தியாவின் பெருமையாளர்கள். நான் ஒரு விளையாட்டு வீரன் என்ற முறையில், தெருவில் இறங்கி போராடி வரும் நம் தேசத்தின் பெருமையாளர்களை கண்டு வேதனை அடைகிறேன். அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

 

மேலும் சானியா மிர்சா தனது ட்விட்டரில், "ஒரு விளையாட்டு வீரர் என்பதை விட ஒரு பெண்ணாக இதைப் பார்ப்பது மிகவும் கடினமாக உள்ளது. அவர்கள் நாட்டிற்கு விருதுகளை வாங்கி வந்தனர். அப்போது அவர்களுடன் சேர்ந்து அவர்களையும் நாம் கொண்டாடினோம். அவர்கள் விருது வாங்கி வந்தபோது நீங்கள் கொண்டாடினீர்கள் என்றால் தற்போது அவர்களின் கடினமான நேரத்திலும் அவர்களுடன் நீங்கள் நிற்க வேண்டும். இது மிகவும் உணர்வுகரமான விஷயம். அது மட்டுமின்றி முக்கிய குற்றச்சாட்டுகளையும் கொண்டது. உண்மை எதுவாக இருந்தாலும் விரைவில் நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.


 

சார்ந்த செய்திகள்