Skip to main content

"நாங்கள் சொன்னது சரி என நிரூபிக்கப்பட்டுள்ளது" - ப.சிதம்பரம்

Published on 20/05/2023 | Edited on 20/05/2023

 

chidambaram tweets about two thousand rupees demonetization issue

 

2000 ரூபாய் நோட்டுகள் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் செல்லாது என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் படிப்படியாகத் திரும்பப் பெறப்படும். டெபாசிட் மற்றும் இதர பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து செப். 30 ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. மேலும் 2000 ரூபாய் நோட்டுகளை விநியோகிப்பதை உடனடியாக நிறுத்துமாறும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

 

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 2016 ஆம் ஆண்டு புழக்கத்தில் இருந்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்து புதிதாக 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்தது. மேலும் நாட்டில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை ஒழிக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என பாஜக அரசு தெரிவித்தது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்தித்தனர். இந்த நிலையில் அக்டோபர் முதல் 2000 ரூபாய் நோட்டும் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பதிவில், "எதிர்பார்த்தது போலவே மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டை திரும்பப் பெற்று, நோட்டுகளை மாற்ற செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் அளித்துள்ளது. 2000 ரூபாய் நோட்டுகள் மக்கள் அனைவரும் பயன்படுத்தக்கூடியது அல்ல. கருப்பு பணத்தை தற்காலிகமாக வைத்திருக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டது. 2016 ஆம் ஆண்டு நவம்பரில் நாங்கள் இதைச் சொன்னோம், நாங்கள் சொன்னது சரி என்று தற்போது  நிரூபிக்கப்பட்டுள்ளது.

 

chidambaram tweets about two thousand rupees demonetization issue

 

500 மற்றும் 1000 ரூபாய் பணமதிப்பிழப்பு என்ற முட்டாள்தனமான முடிவை மறைக்க 2000 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக வழங்கப்பட்டது. பணமதிப்பிழப்பு  செய்யப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி 500 ரூபாய் நோட்டை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இனி 1000 ரூபாய் நோட்டை மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி மீண்டும் அறிமுகம் செய்தாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன்" என்று பதிவிட்டுள்ளார்.

 

மேலும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், "தனக்கு தானே விஸ்வகுரு என்ற பட்டத்தை சூட்டிக்கொண்டவர் முதலில் நடவடிக்கை எடுத்துவிடுவார். அதன் பின்னர்தான் அவர் அது குறித்து சிந்திப்பார். 2016 நவம்பர் 8 இல் அவ்வளவு ஆரவாரத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுகின்றன" எனக் கருத்து தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்