ஆந்திர விஷவாயுக் கசிவுக்குக் காரணமான நிறுவன நிர்வாகத்திடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆந்திர மாநிலத் தொழில்துறை அமைச்சர் எம்.ஜி.ரெட்டி தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நாயுடுதோட்டா அருகே ஆர்.ஆர்.வெங்கடப்புரத்தில் இயங்கி வரும் எல்.ஜி.பாலிமர்ஸ் (LG Polymers industry) இரசாயன ஆலையில் இன்று (07/05/2020) அதிகாலை ஏற்பட்ட விஷவாயுக்கசிவால், அப்பகுதியில் சுமார் 5 கி.மீ தொலைவுக்கு விஷ வாயு பரவியது. இந்த விஷவாயுக் கசிவால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8- ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து பேட்டியளித்த ஆந்திர மாநிலத் தொழில்துறை அமைச்சர் எம்.ஜி.ரெட்டி, "தொழிற்சாலையில் எரிவாயு கசிவு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர், உடனடியாக அந்தப் பகுதியில் முன்னெச்சரிக்கை பணிகள் தொடங்கப்பட்டன. உள்ளூர் நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. விஷவாயு பாதிப்பில்லாத திரவ வடிவத்திற்கு மாற்றப்பட்டுப் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், சிறிய அளவு வாயு தொழிற்சாலை வளாகத்திலிருந்து வெளியேறி அப்பகுதியில் உள்ள மக்களைப் பாதித்துள்ளது. இந்த விபத்துக்கு அந்நிறுவனமே பொறுப்பேற்க வேண்டும். அனைத்துப் பாதுகாப்பு விதிமுறைகளும் சரியாகப் பின்பற்றப்பட்டதா என்பது குறித்து நிறுவன நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொள்ளப்படும். அதன்படி அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.