Skip to main content

சந்திரயான் - 3; சுற்று வட்டப் பாதையின் உயரம் குறைப்பு

Published on 14/08/2023 | Edited on 14/08/2023

 

Chandrayaan - 3 Decreasing altitude of orbit

 

இந்தியா சார்பில் சந்திரயான்-3 என்ற விண்கலத் தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஜூலை 14 ஆம் தேதி ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து எல்.வி.எம் - 3 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது. அதனைத் தொடர்ந்து பூமியின் நீள்வட்டப் பாதையைச் சுற்றி வந்த சந்திரயான் - 3இன் உயரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும் பணியை விஞ்ஞானிகள் செய்து வந்தனர். பூமிக்கும் நிலவுக்கும் இடைப்பட்ட புள்ளியில் பூமியின் ஈர்ப்பு விசையும் நிலவின் ஈர்ப்பு விசையும் சரிசமமாக இருக்கும் இடத்தில் உந்து சக்தி இயந்திரத்தைப் பயன்படுத்தி சந்திரயானை நிலவின் ஈர்ப்பு விசைப் பகுதிக்குள் செலுத்தி வந்தனர்.

 

அந்த வகையில் முதல், இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து மற்றும் ஆறு என விண்கலத்தின் உயரம் உயர்த்தும் நடவடிக்கை சிறு சிறு இடைவெளிகளுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்டு வெற்றிகரமாக முடிந்தது. திட்டத்தின்படி ஆகஸ்ட் 5 ஆம் தேதி நிலவின் சுற்று வட்டப் பாதைக்குள் சந்திரயான்-3 விண்கலம் செலுத்தப்பட்டது. நிலவின் ஈர்ப்பு விசைப் பகுதிக்குச் சென்றவுடன் சந்திரயான் - 3ன் உயரமானது படிப்படியாகக் குறைக்கப்பட்டு நிலவில் தரையிறக்கும் நடவடிக்கைகளை இஸ்ரோ தீவிரப்படுத்தியுள்ளது.

 

கடந்த 6 ஆம் தேதி முதல் சுற்று வட்டப்பாதை குறைப்பு நடவடிக்கை தொடங்கப்பட்ட நிலையில், கடந்த 9 ஆம் தேதி நிலவின் சுற்று வட்டப் பாதை  174 கிமீ X 1437 கிமீ என்ற அளவுக்குக் குறைக்கப்பட்டிருப்பதாக இஸ்ரோ தெரிவித்து இருந்தது. இந்நிலையில் இன்று அடுத்தகட்ட சுற்று வட்டப்பாதை குறைப்பு நடவடிக்கையின் படி 3வது முறையாக சந்திரயான் - 3 விண்கலத்தின் சுற்றுப் பாதையின் உயரம் 18 ஆயிரம் கி.மீ. சுற்று வட்டப் பாதையில் இருந்து ஆயிரத்து 347 கி.மீ. வரை உயரம் குறைக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஆகஸ்ட் 23 ஆம் தேதி நிலவிற்குள் சந்திரயான் 3 விண்கலம் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்