மருத்துவ அடையாள எண் வழங்கும் திட்டமான 'ஆயுஷ்மான் பாரத்' மின்னணு இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலம் தொடங்கி வைத்தார். 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி அறிவிக்கப்பட்ட இத்திட்டம், ஆறு யூனியன் பிரதேசங்களில் அமல்படுத்தப்பட்டுவரும் நிலையில், நாடு முழுமைக்கும் திட்டத்தை பிரதமர் தொடங்கிவைத்துள்ளார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "நாட்டில் உள்ள அனைவருக்கும் மருத்துவ அடையாள அட்டை ஆயுஷ்மான் திட்டத்தில் வழங்கப்படும். இது ஒரு தொலைநோக்கு திட்டம். இதன் மூலம் ஏழை முதல் அனைத்து தரப்பினருக்கும் மருத்துவ வசதி பெறுவது எளிதாகும். மருத்துவர்களை அணுகும்போது மொழி பிரச்சனை இருக்காது. மருத்துவ சிகிச்சைப் பெறுவதில் உள்ள சிக்கல்கள் நீக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
மருத்துவ அடையாள எண் என்பது என்ன? என்பது குறித்து பார்ப்போம்
மருத்துவ அடையாள எண் வழங்கும் திட்டத்தில் ஒவ்வொரு நபருக்கும் அடையாள அட்டைகள் வழங்கப்படும். மருத்துவ சிகிச்சை விவரங்கள், மருத்துவ ஆவணங்கள், பரிசோதனை முடிவுகள் என ஒரு நபரின் அனைத்து மருத்துவ தகவல்களும் அடையாள எண்ணில் கொண்டுவரப்படும். மின்னணு முறையில் இணைக்கப்பட்டிருக்கும் அடையாள எண்ணை, செல்பேசி செயலி உதவியுடனும் அணுக முடியும். மருத்துவ நிபுணர்களின் பதிவேடு, சுகாதார வசதிகளின் பதிவுகள், நவீன பாரம்பரிய மருத்துவர்கள் குறித்த தகவல்கள் அடங்கிய களஞ்சியமாக செயலி செயல்படும்.
மருத்துவர்கள், மருத்துவ சேவை வழங்குவோர் அடையாள எண்ணை கணினியில் உள்ளீடு செய்தால் அனைத்து விவரங்களும் தெரிந்துவிடும். மருத்துவ அடையாள எண் வழங்குவதால் மருத்துவ சிகிச்சை அளிப்பது எளிதாகும். அதே நேரம், பாதுகாப்பு, ரகசியத் தன்மை மற்றும் மருத்துவம் சம்பந்தமான தனிநபர் தகவல்களின் தனியுரிமை உறுதி செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.