கோவிட் -19க்கு சிகிச்சையளிக்க பாராசிட்டமால் போதுமானது என்ற ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் கருத்துக்குத் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சீனாவின் வுஹானில் தொடங்கி தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரசால் இதுவரை 6518 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் பரவ ஆரம்பித்துள்ள இந்த வைரஸ் இதுவரை 110 பேரைப் பாதித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் இதுவரை இரண்டு பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கோவிட் -19க்கு சிகிச்சையாக பாராசிட்டமால் போதுமானது என ஜெகன்மோகன் ரெட்டி கூறியது சர்ச்சையாகியுள்ளது.
ஜெகன்மோகன் ரெட்டி பேசும் ஒரு காணொளியில், "கரோனா வைரசைப் பற்றிய சில உண்மைகளை நாம் அறிந்திருக்க வேண்டும். இது மக்களைக் கொல்லும் ஆபத்தான வைரசாகக் காட்டப்படுகிறது. இதனால் பீதியடைய வேண்டிய அவசியமில்லை. உலகின் சுமார் 80% மக்களுக்கு இது அவ்வப்போது வந்து செல்கிறது. இதற்கான மருந்து பாராசிட்டமால் தான்" எனத் தெரிவித்துள்ளார்.
ஜெகனின் இந்தப் பேச்சு இணையத்தில் கிண்டலுக்கு உள்ளான நிலையில், இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள சந்திரபாபு நாயுடு, "கரோனா வைரஸ் உயிர்களைக் கொல்கிறது. மிக வேகமாகப் பரவி வருகிறது. இதை லேசாக எடுத்துக் கொள்ள முடியாது, குறிப்பாக முதல்வரின் நாற்காலியில் அமர்ந்திருக்கும் ஒருவர் இதனை லேசாக எடுத்துக்கொள்ளக் கூடாது. கரோனாவுக்கு பாராசிட்டமால் மூலம் சிகிச்சை அளிக்கலாம் என்ற ஜெகனின் கருத்து அதிர்ச்சியளிக்கிறது”எனத் தெரிவித்துள்ளார்.