மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கட்சிக்கு 55 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள நிலையில், அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அதிருப்தியாளராக மாறியுள்ளார். இதனால் சிவசேனா கட்சியின் 33 சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஏக்நாத் ஷிண்டே அசாம் மாநிலம், கவுகாத்தியில் சொகுசு விடுதியில் தங்கியுள்ளார். தனக்கு 40 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, மகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணி ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த மாநிலத்தில் சிவசேனா அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தி உள்ள நிலையில், மகாராஷ்டிர விகாஸ் அகாதி கூட்டணி ஆட்சி பெரும்பான்மையை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், காணொளி மூலம் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, "நான் முதலமைச்சராக நீடிக்கக் கூடாது என சட்டமன்ற உறுப்பினர்கள் விரும்பினால் ராஜினாமா செய்ய தயார். கட்சிப் பதவியில் இருந்தும் விலகத் தயார். என் மீது குறை இருந்திருந்தால், முகத்திற்கு நேராக சொல்லலாம், சூரத்தில் இருந்துக் கொண்டு சொல்லக் கூடாது" எனத் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் பேச்சால், காங்கிரஸ், தேசிய வாத காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.