உலகின் வலிமைமிகு இராணுவங்களின் பட்டியலை 'மிலிட்டரி டைரெக்ட்' என்ற இணையதளம் வெளியிட்டுள்ளது. இராணுவத்திற்கு ஒதுக்கப்படும் பட்ஜெட், நாட்டின் இராணுவ அதிகாரிகளின் எண்ணிக்கை, அவர்களின் ஊதியம், இராணுவத்தில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் மற்றும் அணு ஆயுதம் இருப்பு உள்ளிட்ட பல்வேறு அளவீடுகளை அடிப்படையாக கொண்டு இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பட்டியலியல் சீனா முத்லிடத்தை பிடித்துள்ளது. அந்நாடு 82 புள்ளிகளை பெற்றுள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் அமெரிக்க இராணுவம் 74 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. 69 புள்ளிகளோடு மூன்றாவது இடத்தில் ரஷ்யாவும், 61 புள்ளிகளோடு நான்காவது இடத்தில் இந்தியாவும் உள்ளன. ஐந்தாவது இடத்தில் பிரான்ஸ் உள்ளது. அந்தநாடு 58 புள்ளிகளை பெற்றுள்ளது.
உலகிலேயே இராணுவத்திற்கு அதிகம் செலவு செய்யும் நாடு அமெரிக்கா என மிலிட்டரி டைரெக்ட்டின் புள்ளி விவரம் கூறுகிறது. அந்தநாடு ஒரு வருடத்திற்கு 732 பில்லியன் அமெரிக்க டாலர்களை இராணுவதிற்கு செலவு செய்வதாக தெரிவித்துள்ள அப்புள்ளி விவரம், அதற்கடுத்து இராணுவத்திற்கு அதிகம் செலவு செய்யும் நாடு சீனா என்றும், அந்தநாடு வருடத்திற்கு 261 பில்லியன் அமெரிக்க டாலர்களை இராணுவத்திற்கு செலவு செய்வதாக கூறியுள்ளது. இந்த இருநாடுகளுக்கு அடுத்து இராணுவத்திற்கு அதிகம் செலவு செய்யும் நாடு இந்தியா என அப்புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இந்தியா ஆண்டிற்கு 71 பில்லியன் அமெரிக்க டாலர்களை இராணுவத்திற்கு செலவு செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.