டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22 ஆவது ஆலோசனைக் கூட்டம் கடந்த 11 ஆம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரைத் திறந்து விட வேண்டும் எனத் தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்ட அதிகாரிகள் கோரிக்கைகளை எடுத்து வைத்தனர். இதையடுத்து காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி என 38 டி.எம்.சி தண்ணீரைத் திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
அதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில், கர்நாடக அரசு காவிரியில் நீர் திறந்து விடக்கோரி தமிழக அரசு சார்பில் கடந்த 14 ஆம் தேதி மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த 25 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் உடனடியாக உத்தரவு பிறப்பிப்பது கடினம். காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தை நடத்தி ஆலோசித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கு செப்டம்பர் 1 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து கடந்த 28 ஆம் தேதி டெல்லியில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நடைபெற்றது. தமிழகம் உள்ளிட்ட 4 மாநில அதிகாரிகளும் காணொளி காட்சி வாயிலாக பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் காவிரியில் இருந்து வினாடிக்கு 24 ஆயிரம் கன அடி நீர் திறக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதையடுத்து காவிரி ஆற்றில் இருந்து தமிழ்நாட்டிற்கு 5 ஆயிரம் கன அடி நீரை திறக்க காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்திருந்தது. அதே சமயம் 3 ஆயிரம் கன அடி மட்டுமே திறக்க முடியும் என கர்நாடக அரசு காவிரி ஒழுங்காற்று குழுவிடம் தெரிவித்திருந்தது.
அதனைத் தொடர்ந்து கடந்த 29 ஆம் தேதி டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெற்றது. அப்போது காவிரியில் இருந்து வினாடிக்கு 24 ஆயிரம் கன அடி நீர் திறக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என கூட்டத்தில் கர்நாடக அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் காவிரி நீர் திறப்பது குறித்து காவிரி ஒழுங்காற்று குழு நேற்று பிறப்பித்திருந்த பரிந்துரையைக் காவிரி மேலாண்மை ஆணையம் ஏற்றுக்கொண்டது. அதன்படி தமிழகத்திற்கு காவிரியில் இருந்து அடுத்த 15 நாட்களுக்கு விநாடிக்கு 5 அயிரம் கன அடி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில் காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகாவுக்கும், காவிரி மேலாண்மை ஆணையத்திற்கும் எதிராக தமிழக அரசு சார்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், “மழைப்பொழிவு குறைவு உள்ளிட்ட காரணங்களால் தமிழகத்திற்கு தேவையான நீரை திறந்து விட கோரியும், 8.988 டிஎம்சி அளவிற்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டிருக்க வேண்டிய நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் தவறிவிட்டது என 6 முக்கியத்துவம் வாய்ந்த கருத்துகளை கொண்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.