Skip to main content

டங்ஸ்டன் சுரங்க விவகாரம்; மத்திய அமைச்சருடன் போராட்டக்குழுவினர் சந்திப்பு!

Published on 22/01/2025 | Edited on 22/01/2025
Tungsten Mining Affair strugglers meeting with the Union Minister

மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்திற்கு உட்பட்ட அரிட்டாபட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு ஏலம் நடத்தியது. இதில் வேதாந்தா குழுமத்தின் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் ஏலம் எடுத்திருந்தது. இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் இந்த சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடந்த நவம்பர் 28ஆம் தேதி (28.11.2024) கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், ‘மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்திட வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி சுரங்க உரிம ஏலங்களை மேற்கொள்ளக் கூடாது’ என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து தமிழக சட்டப்பேரவையில், அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் கனிம சுரங்க உரிமையை ரத்து செய்ய வலியுறுத்தித் தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இத்தகைய சூழலில் தான் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள இடத்தை மறு ஆய்வு செய்ய மத்திய அரசு பரிந்துரை செய்திருந்தது. மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைய உள்ள இடத்தில் 4 பல்லுயிர் பாரம்பரிய தலம் உள்ளதாக கருத்துருக்கள் வந்தன. எனவே டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் இடத்தை மறு ஆய்வு செய்ய மத்திய அரசு பரிந்துரை செய்கிறது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் டெல்லியில் மத்திய சுரங்கத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை இன்று (22.01.2025) மதுரை மாவட்டம் மேலூர் தொகுதிக்குட்பட்ட வல்லாளப்பட்டி, அரிட்டாபட்டி, கிடாரிப்பட்டி மற்றும் நரசிங்கம்பட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் அடங்கிய போராட்டக் குழுவினர் நேரில் சந்தித்து, டங்ஸ்டன் சுரங்க ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்தனர். அப்போது மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உடன் இருந்தார்.

இந்த சந்திப்பின் போது மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதன் மூலம், அப்பகுதி மக்களுக்கு ஏற்படும் வாழ்வாதார இடர்பாடுகள் குறித்து மத்திய அமைச்சரிடம் விளக்கமளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, பிரதமர் மோடியை இன்று சந்தித்துப் பேச உள்ளார். அதன் பின்னர் டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக நாளை (23.01.2025) மத்திய அரசின் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சார்ந்த செய்திகள்