நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக மே 7ஆம் தேதியும், நான்காம் கட்டமாக ஏப்ரல் 13ஆம் தேதியும் தேர்தல் நடைபெற்று முடிந்தது. அதனைத் தொடர்ந்து, நடைபெறும் அடுத்தகட்ட தேர்தலை எதிர்கொண்டு காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று (20.05.2024) காலை 07.00 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதனையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே தேர்தல் நடத்தை விதிகளை மீறி திரிணாமுல் காங்கிரஸ் குறித்து பாஜக சார்பில் அவதூறு விளம்பரங்கள் வெளியிடுவதாக கூறி கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி சப்யசாசி பட்டாச்சார்யா அமர்வில் இன்று (20.05.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “ஜூன் 4 வரை தேர்தல் நடத்தை விதிகளை மீறி திரிணாமுல் காங்கிரஸ் குறித்து பாஜக விளம்பரங்கள் வெளியிடக்கூடாது. தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் பாஜகவின் விளம்பரங்கள் உள்ளன.
பாஜகவுக்கு எதிரான புகார் மீது தேர்தல் ஆணையம் எடுத்துள்ள நடவடிக்கைகள் போதுமானதல்ல. விளம்பரம் என்ற போர்வையில் பாஜகவை எதிர்த்து போட்டியிடுபவர்கள் மீது அவதூறு புகார்கள் கூறப்பட்டுள்ளன. தேர்தல் விளம்பரங்களின் உண்மைத் தன்மையை உறுதிசெய்யாமல் பத்திரிகைகள் பிரசுரிக்கக்கூடாது. இந்திய பத்திரிகை கவுன்சிலின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு ஏற்ப பத்திரிகைகள் செயல்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.