Skip to main content

“ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை நடைமுறைப்படுத்தப்படும்” - பாஜக தேர்தல் அறிக்கை

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
  bjp election manifesto that the Civil Code act will be implemented.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கும் வாக்குப்பதிவு ஜூன் 1 ஆம் தேதி வரை நாடுமுழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. பின்பு பதிவான வாக்குகள் ஜூன் 4 எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் வெளியிடப்படவுள்ளது.

ஆட்சியைத் தக்க வைக்கும் வகையில் பாஜகவும், இழந்த ஆட்சியை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.  காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இந்த நிலையில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி தற்போது வெளியிட்டுள்ளார். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான குழு உருவாக்கிய இந்த தேர்தல் அறிக்கை டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் வைத்து தற்போது வெளியிட்டப்பட்டுள்ளது.

தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பிரதமர் மோடி அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய வாக்குறுதிகள் குறித்து பேசி வருகிறார். அதில், “அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தேர்தல் அறிக்கையை தயாரித்ததற்காக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் அவரது குழுவுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்குடன் கூடிய தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளோம். நாடு முழுவதும் பாரதிய ஜனதாவின் இந்த தேர்தல் அறிக்கைக்காக மக்கள் காத்திருக்கிறார்கள். 

இளைஞர்கள், பெண்கள், ஏழைகள், விவசாயிகள் ஆகியோரை மையமாகக் கொண்டு இந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்தப்படும். நாடு முழுவதும் பொது வாக்காளர் பட்டியல் நடைமுறைப்படுத்தப்படும். 2025 ஆம் ஆண்டு பழங்குடியினர் கௌரவ தினமாக அறிவிக்கப்படும். பிரதமரின் மக்கள் மருந்தகங்களில் 80 சதவீத தள்ளுபடியுடன் மருந்துகள் கிடைக்கும். 70 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் கொண்டுவரப்படும். அனைவருக்கும் பாரத திட்டத்தின் கீழ் 5 லட்சம் வரை இலவசமாக மருத்துவம் பார்த்துக் கொள்ளலாம். அடுத்த ஐந்தாண்டுகளில் மேலும் மூன்று கோடி பேருக்கு இலவச வீடுகள் வழங்கப்படும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் மேலும் 3 கோடி பேருக்கு இலவச வீடுகள் வழங்கப்படும். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்.

முத்ரா கடன் உதவி  ரூபாய் 10 லட்சத்திலிருந்து 20 லட்சமாக உயர்த்தப்படும். குறைந்த விலையில் பைப் மூலமாக கேஸ் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இலவச உணவு தானியம் வழங்கப்படும் திட்டம் மேலும் ஐந்தாண்டுகளுக்கு வழங்கப்படும்.  திருநங்கைகளுக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் விரிவுப்படுத்தப்படும். பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.  நாடு முழுவதும் அனைத்து மாணவர்களுக்கு (One Nation One Student) நிரந்தர அடையாள எண். மிக தொன்மையான தமிழ் மொழி நம் நாட்டின் மிகப்பெரிய கௌரவம். தமிழ் மொழியை எல்லா இடங்களிலும் பரப்பும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். திருவள்ளுவர் கலாச்சார மையம் உருவாக்கப்படும். 

பயோ கேஸ், சூரிய ஒளி, மின்சக்தி உள்ளிட்ட சுயசார்பு இந்தியாவுக்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும். சூரிய ஒளி மூலம் நாடு முழுவதும் மின்சாரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இந்தியாவை மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக மாற்றுவோம். இந்தியா சார்பில் சர்வதேச விண்வெளி மையம் அமைக்கப்படும். வந்தே பாரத் மெட்ரோ, ஸ்லீப்பர் உள்ள மூன்று வகையான வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும். மும்பை அகமதாபாத் இடையே புல்லட் ரயில் இயக்கப்படும்.

லாரி ஓட்டுனர்களுக்கு தேசிய நெடுஞ்சாலைகளில் ஓய்வு மையம். நிலவில் மனிதன் தரையிறங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். நாடு முழுவதும் புதிய விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் அமைக்கப்படும். உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். பெண்களுக்கு ரூபாய் 1-க்கு சானிட்டரி நாப்கின் வழங்கப்படும்” உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்