மாதவிடாய் தொடர்பான விவாதங்கள் சமகாலத்தில் அதிகம் முன்வைக்கப்படும் சூழலில், மாதவிடாய்க் காலத்தில் பெண்களை தனியாக வீட்டுச்சிறையில் அடைத்து வைக்கும் பழக்கம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் வனாஞ்சல் மாவட்டத்தில் உள்ளது சிட்டகோன் கிராமம். இந்த கிராமத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஒரு வீடு கட்டப்பட்டுள்ளது. இந்த வீட்டிற்கு ‘மாதவிடாய் வீடு’ என்ற பெயரும் வைக்கப்பட்டுள்ளது. இந்த கிராமத்தில் உள்ள இளம்பெண்களுக்கு மாதவிடாய்க் காலம் ஏற்படும்போது, அந்த வீட்டில் இரவும் பகலும் என மூன்று நாட்கள் தனியாக தங்க வைக்கப்படுகின்றனர். அங்குள்ள வீடுகளில் கடவுள்களின் சிலைகள் வைக்கப்பட்டிருப்பதாலும், கடவுள்களின் கோபத்திற்கு அந்த இளம்பெண்கள் ஆளாகக் கூடாதென்றும் இந்த நடைமுறையை அந்த ஊர் மக்கள் கையாளுகின்றனர்.
நீண்டகாலமாக இதுபோன்ற நடைமுறை அந்தக் கிராமத்தில் கையாளப்படுவதாகவும், சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளாததால் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் தெரிவித்துள்ளனர். இளம்பெண்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் அதன்மீதும், வாழ்வின் மீதும் வெறுப்படையாமல் இருக்க, அந்தப் பகுதி மக்களுக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், பெண்கள் மாதவிடாய்க் காலங்களில் அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வழிவகை செய்யவேண்டும் எனவும் அப்பகுதியின் மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.