கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது கர்நாடக மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ராகுல் காந்தி, ‘மோடி என்று பெயர் வைத்தவர்கள் எல்லாம் எப்படி திருடர்களாக இருக்கிறார்கள்’ என்ற வகையில் பேசியிருந்ததாகக் கூறி பாஜகவைச் சேர்ந்த குஜராத் எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான பூர்னேஷ் மோடி குஜராத் சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் கடந்த மார்ச் மாதம் ராகுல் காந்தியை குற்றவாளியாக அறிவித்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் எம்.பி பதவியும் பறிக்கப்பட்டது. இதையடுத்து இந்தத் தீர்ப்பை எதிர்த்து குஜராத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனைக்குத் தடை விதித்து உத்தரவிடக் கோரி ராகுல் காந்தி சார்பில் இரண்டாவது மேல்முறையீடு செய்யப்பட்டது. குஜராத் உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை முடிவில் சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானது. அதில் தலையிட முடியாது எனத் தெரிவித்து ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவை குஜராத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து ராகுல் காந்தி குஜராத் உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு மீண்டும் நாளை (04.08.2023) விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில், ராகுல் காந்தி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், “அவதூறு வழக்கில் தான் குற்றவாளி இல்லை. தனது பேச்சில் தவறு இல்லை என்பதால் மன்னிப்பு கோர முடியாது. மன்னிப்பு கேட்க வேண்டும் என்றால் முன்னதாகவே செய்திருப்பேன். அதே சமயம் தன் மீது உள்ள தண்டனையை ரத்து செய்ய வேண்டும். நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.