புதுச்சேரியில் நண்பனின் பிறந்தநாளுக்கு புல்லட்டை பரிசளிக்க நினைத்த நண்பர்கள் புல்லட்டை திருடி பரிசாகக் கொடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாகத் திருட்டில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுச்சேரி மாநிலம் லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஆதிகேசவ பெருமாள். இவர் கடந்த வாரம் ஈ.சி.ஆர் சாலையில் தன்னுடைய புல்லட்டை நிறுத்தியிருந்த நிலையில், காணாமல் போனதாக லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து போலீசார் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை செய்து வந்தனர்.
தொடர் விசாரணையில், காணாமல் போனதாகக் கூறப்படும் புல்லட்டை இளைஞர் ஒருவர் ஓட்டிச் செல்ல, பின்னாடியே மற்றொரு இளைஞர் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த காட்சி சிக்கியது. இந்த காட்சிகளை வைத்து போலீஸ் விசாரணை மேற்கொண்டனர். அருகில் உள்ள மற்ற எல்லைக் காவல் நிலையங்களுக்கும் இந்த சிசிடிவி காட்சிகள் அனுப்பி வைக்கப்பட்டு இளைஞர்கள் குறித்த தகவலை போலீசார் திரட்ட நடவடிக்கை மேற்கொண்டனர்.
அப்பொழுது நெட்டப்பாக்கம் காவல் நிலைய பகுதியில் இருந்து ஒரு தகவல் கிடைத்தது. புல்லட்டை ஓட்டிக்கொண்டு சென்றது கரியமாணிக்கம் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் என்பது தெரியவந்தது. அஜித்குமார் ஏற்கனவே நீர் மோட்டாரை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டவர் எனவும் தெரிந்தது. உடனடியாக அஜித்குமாரை கைது செய்த போலீசார் விசாரணை செய்ததில், பர்த்டே கிப்ட்காக புல்லட்டை திருடியது வெளிவந்தது.
அஜித்குமார் திருட்டு வழக்கில் சிறையில் இருந்த பொழுது, அதே சிறையில் பெரியார் நகரைச் சேர்ந்த உத்ரேஷ் என்ற நபருடன் பழக்கமாகியுள்ளார். இருவரும் நண்பர்கள் ஆகிவிட்டனர். இருவரின் நட்பும் சிறையிலிருந்து வெளியே வந்த பின்னரும் தொடர்ந்துள்ளது. இந்நிலையில் உத்ரேஷ் தனக்கு புல்லட் வாங்க வேண்டும் என ஆசையாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அவருடைய ஆசை நிறைவேற்ற நினைத்த அஜித், ஆனந்த் என்ற மற்றொரு நண்பருடன் சேர்ந்து புல்லட்டை திருடியது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து புல்லட் மட்டுமல்லாது மொத்தம் 4 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.