கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தை சேர்ந்த மனுகுமாரும்(25), அதே பகுதியைச் சேர்ந்த பவானி(25) என்ற இளம்பெண்ணும் பல வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். மனுகுமார் உணவகம் ஒன்று வைத்து நடத்தி வந்துள்ளார். கல்லூரி படிக்கும் காலத்தில் இருந்தே மனுகுமாரும், பவானியும் காதலித்து வந்துள்ளனர். ஒன்றாக அமர்ந்து பேசுவது, ஒன்றாக வெளியே செல்வது என்று காதலை அடுத்த கட்டத்திற்கும் எடுத்துச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மனுகுமார் பவானியுடன் சரியாக பேசாமல் அவரை தவிர்த்து வந்துள்ளார். போன் செய்தாலும் எடுக்காமல் இருந்து வந்துள்ளார். மேலும் திருமணக் குறித்துப் பேசினாலே, எதாவது காரணம் சொல்லித் தட்டிக் கழித்து வந்துள்ளார். இப்படியே மனுகுமார் புறக்கணிக்க இருவருக்கும் இடையே பிரச்சனை நீண்டுகொண்டே சென்றது.
இந்த நிலையில்தான் புத்தாண்டை கொண்டாட மனுகுமாரின் நண்பர்கள் அவரை அழைத்துள்ளார். அந்த நேரத்தில் சம்பவ இடத்திற்கு பவானியும் வந்துள்ளார். பின்னர் இருவரும் ஒரு தனி அறையில் அமர்ந்து திருமணம் குறித்து விவாதித்துள்ளனர். ஆனால், அப்போதும் மனுகுமார் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்காமல் இருந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பவானி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனுகுமாரை சரமாரியாக குத்தி உள்ளார். மனுகுமாரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த நண்பர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து பவானியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.