மேற்கு வங்காள சட்டசபையில் 3 தொகுதிகளுக்கு கடந்த 25-ந் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இந்த 3 தொகுதிகளிலும் மாநிலத்தை ஆளும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. கலியாகஞ்ச் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் தாபன்தேவ் சிங்கா தனக்கு அடுத்த படியாக வந்த பாரதீய ஜனதா வேட்பாளர் கமல்சந்திர சர்காரை 2,414 ஓட்டு வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். கரக்பூர் சதாரில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் பிரதீப் சர்கார், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாரதீய ஜனதா வேட்பாளர் பிரேம் சந்திர ஜாவை 20 ஆயிரத்து 853 ஓட்டு வித்தியாசத்தில் வென்றார்.
கரீம்பூர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் பீமலேந்து சின்காராய், தனக்கு அடுத்தபடியாக வந்த பாரதீய ஜனதா வேட்பாளர் ஜெய்பிரகாஷ் மஜூம்தாரை 23 ஆயிரத்து 910 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்த வெற்றி மக்களின் வெற்றி என்று மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்தார். மேலும், பாரதீய ஜனதாவின் அராஜகத்தை மக்கள் நிராகரித்து உள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.