பீகார் மாநிலம் சரன் மாவட்டத்தில் உள்ள மதவ்ரா பகுதியில் வசிக்கும் 15 சிறுவனுக்குக் கடந்த 6 ஆம் தேதி திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வாந்தி எடுத்ததால் அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர் அதே பகுதியில் கிளினிக் வைத்திருக்கும் அஜித் குமார் பூரி என்பவரிடம் அழைத்துச் சென்றுள்ளனர். கிளினிக்கில் வைத்து சிறுவனுக்கு மருத்துவம் பார்த்த அஜித்குமார் பூரி சிறுவனின் பித்தப்பை கல்லை அகற்றும் அறுவை சிகிச்சையை யூட்டியூப்பை பார்த்து அவரே செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும் மூச்சித்திண்றல் ஏற்பட்டு சிறுவனின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அஜித்குமார் பூரி, சிறுவனை மேல் சிகிச்சைக்காக பாட்னாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவரது பெற்றோர் சிறுவனை மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றபோது, செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனிடையே சிறுவனுக்கு மருத்துவம் பார்த்த அஜித்குமார் பூரி தலைமறைவான நிலையில், புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து அஜித் குமார் பூரியைத் தேடி வருகின்றனர்.