அழகு க்ரீம் போட்டால், அழகு மட்டும்தான் வரும் என்றில்லை, தோல்நோய்கூட வரலாம். அழகைத் தேடிப்போய் அவலட்சணத்துக்கு ஆளாகாதீர்கள் என எச்சரிக்கிறது இந்திய தோல்நோய் மருத்துவர்களின் கூட்டமைப்பு.

அதிக மக்கள்தொகையும் கருப்பு, பழுப்புநிற மக்களும் நிறைந்துள்ள ஆசிய நாடுகளை அழகுபொருட்கள் சாதன நிறுவனங்கள் குறிவைத்து தம் சந்தையை விரிவுபடுத்துவதில் ஆர்வம்காட்டுகின்றன. இந்தியச் சந்தையில் அழகை இலக்காய்வைத்து வரும் அழகு க்ரீம்களின் எண்ணிக்கையை கணக்கெடுப்பது இலகுவானதல்ல.
மக்களின் இந்த அழகு நாட்டத்தைப் புரிந்துகொண்டு லாபநோக்கு ஒன்றே குறிக்கோளாய் இயங்கும் நிறுவனங்கள், தங்கள் தயாரிப்புகளில் ஸ்டீராய்டுகளையும், சரும நோய்களுக்கான மருந்துகளில் ஹெவிடோஸ் மருந்துகளையும் பயன்படுத்துவதாக ஐ.ஏ.டி.வி.எல். (IADVL) குற்றம்சாட்டியுள்ளது.
கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி உலக சரும ஆரோக்கிய தினம் கொண்டாடப்பட்டது. இந்திய தோல்நோய் கூட்டமைப்பைச் சேர்ந்த நிபுணர்கள் பேசியபோது இந்தியாவில் பூஞ்சைகளால் மனித சருமத்துக்கு ஏற்படும் நோய்கள் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருவதாகவும், இத்தகைய பூஞ்சை நோய்களுக்கு சிகிச்சையாக அளிக்கப்படும் மருந்துகளுக்கு நோய் கட்டுப்பட மறுப்பதாகவும் தெரிவித்தனர்.
சில அழகு சாதன நிறுவனங்களும், மருந்துக் கம்பெனிகளும் தங்கள் மருந்துகளில் ஸ்டீராய்டைப் பயன்படுத்துவதே இதற்குக் காரணம் என்றனர். சுகாதார அமைச்சகம் சரியான சமயத்தில் இதற்கான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டினர்.